கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக கிளை அலுவலகத்தில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் V.முரளிதரன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித் அவர், “கோயம்புத்தூர் குறித்து பிரதமர் குறிப்பிடுகையில் பழமையோடு நவீனத்துவமும் சேர்ந்த பகுதி என குறிப்பிடுகிறார்.
இந்திய கலாச்சாரத்திலும் இந்துக்கள் கலாச்சாரத்திலும் சனாதன தர்மத்திலும் தமிழ்நாட்டிற்கு பழம்பெருமை மிக்க பாரம்பரியம் உள்ளது.
இங்குள்ள மருதமலை கோவில் 1200 ஆண்டுகால பழமை வாய்ந்ததாகும். அந்த வகையில் தமிழக கலாச்சாரமும் பாரம்பரியமும் சனாதன தர்மத்தோடு இணைந்ததாகும்.இதை அறியாமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்கள் சனாதன தர்மத்தை கொடூர நோய்களோடு ஒப்பிட்டு அழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் தமிழக மக்கள் அவர்களின் கருத்தை நிராகரித்து விட்டனர்.
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இந்து மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் இதில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் அயோத்தியா என்பது ராமரின் நிலமாகும்.
ராமர் பிறந்த இடத்தில் கோவில் உருவாக வேண்டும் என 500 ஆண்டுகளாக மக்கள் காத்திருக்கின்றனர்.பெத்லகேம் கிருத்தவர்களுக்கு புனித நகரம் என்பது போல, மெக்கா இஸ்லாமியர்களுக்கு புனித நகரம் என்பது போல, இந்துக்களுக்கு அயோத்தியா புனித நகரமாக விளங்குகிறது.
அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யும்போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் எந்த கொண்டாட்டங்களும் இருக்கக் கூடாது என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்துக்கள் கொண்டாடுவதை தடுப்பதற்கு தமிழக அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை. நமது நாடு சுதந்திர நாடு.நமது அரசியலமைப்புச் சட்டம் விரும்பும் மதத்தினை கடைபிடிக்க அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களும் ராமரை வழிபடுபவர்களும் ராமர் கும்பாபிஷேகத்தை கொண்டாடலாம்.
தமிழ்நாடு அரசு இந்தியாவில் இல்லாததாக நினைத்து அரசியலமைப்பில் இல்லாத அவர்களது கருத்துக்களை விதிமுறைகளையும் வலியுறுத்துகின்றனர்” என்றார்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“