கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோவை வந்தார்.
முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க வளாகத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் நிருவனருமான ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஸ், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்வில் செய்தியாளரை சந்தித்த மத்திய அமைச்சர் பேசுகையில், “தமிழக மக்கள் அனைவரையும் இணைக்கும் வகையில் இளம் தலைவரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்திவரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை தமிழக மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளது.
உலக அளவில் தமிழ்நாடு பெருமை அடைய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் அண்ணாமலை. 'வாசுதேவ குடும்பம்' எனும் நமது பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகம் ஒரே குடும்பம் என்கிற எண்ணத்தில் இந்தியாவோடு சேர்ந்து தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு உலகம் ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்கிற கருத்தை முன்வைத்துள்ளார். துரதிஷ்டவசமாக சில திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகின்றன.
மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர். ஆனால், அண்ணாமலை நமது ஒற்றுமையை தமிழகத்தின் எல்லா பகுதிக்கும் எடுத்துச் சென்று வருகிறார்.
தமிழக மக்கள் பாரத பிரதமரோடும் அண்ணாமலையோடும் சேர்ந்து இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழக மக்கள் ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க உறுதுணையாக இருப்பார்கள்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை விலக்கி இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகம் இழந்த முன்னணி இடத்தை மீண்டும் பெற்றிடும்.
நான் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள ஜவுளி தொழில் துறையினரை சந்தித்து வருகிறேன். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா ஆகியவை பல்வேறு விலை மாற்றங்களை சந்தித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் நான் பெருமிதமாக கூறுகிறேன். நமது ஜவுளித்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவை ஜவுளி துறையின் மையமாக உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு இருக்கும்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.