Advertisment

ஸ்டாலின் இந்து விரோதி; வக்பு வாரியத்தால் பாதிக்கப்படும் மக்களை கண்டுக் கொள்ளவில்லை - ஷோபா கரந்தலாஜே

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து விரோதி என்பதால், வக்பு வாரியத்தால் பாதிக்கப்படும் மக்களை கண்டுக் கொள்ளவில்லை. இந்து ஆலய வருமானம் தேவை. இந்து ஆலயங்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள் – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shobha Karandlaje at Trichy

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து விரோதி என்பதால், வக்பு வாரியத்தால் பாதிக்கப்படும் மக்களை கண்டுக் கொள்ளவில்லை என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே திருச்சியில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

Advertisment

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான நிலங்கள், வக்பு வாரியத்துக்குச் சொந்தமானவை என அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராமத்தில் நிலம் பாதுகாப்பு இயக்கம் என்ற இயக்கம் துவக்கப்பட்டு, வக்பு சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், திருச்செந்துறை கிராமத்தில் நிலம் பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கலந்து கொண்டு, வக்பு வாரியத்துக்கு நிலத்தை பறி கொடுத்தவர்களை சந்தித்து பேசினார்.

பின்னர், பொதுமக்களை சந்தித்து நில விவகாரம் குறித்து கேட்டறிந்தவர், வக்பு சொந்தம் கொண்டாடிய சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே சென்று வழிபட்டு பிரதமர் பெயரில் அர்ச்சனை செய்தார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் தெரிவித்ததாவது;
கடந்த 1950ம் ஆண்டு அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் வக்பு போர்டு இல்லை. ஆனால் 1954-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த நேருவின் காலக்கட்டத்தில் தான் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்தியாவில் 1000 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவின் மூன்றாவது அதிக நிலங்களை வக்பு கொண்டுள்ளது.

இந்தியாவில் 3.4 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்புக்கு சொந்தம் என்கின்றனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்கள் என்றால் அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இந்து கோயில்கள், மடங்கள், விவசாயிகள், பொதுமக்களின் நிலங்களை அவர்களுக்கு சொந்தம் என்றால் எப்படி ஏற்பது? குறிப்பாக, திருச்சி திருச்செந்துறை சந்திரசேகர சாமி கோவில் உட்பட இடங்களை வக்புக்கு சொந்தம் என்கின்றனர்.

இந்த கோயில் 1,300 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் தாத்தா பராந்தக சோழனால் கட்டப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து விரோதி என்பதால், வக்பு வாரியத்தால் பாதிக்கப்படும் மக்களை கண்டுக் கொள்ளவில்லை. இந்து ஆலய வருமானம் தேவை. இந்து ஆலயங்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்கி 500 கிலோ தங்கக் கட்டியை விற்க முயன்றனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பின்னர் 200 கிலோ விற்பதாக சொல்கின்றனர். தமிழகத்தில் பாரதமாதா சிலை வைக்க முடியவில்லை. 

ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு சம்பவத்தில் தமிழர்கள் குற்றவாளிகள் என்று நான் சொல்லவில்லை. குற்றவாளிகள் பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வந்து பயிற்சி பெற்று இங்கிருந்து பெங்களூரு வந்து குண்டு வைத்திருக்கிறார்கள் என்று தான் சொன்னேன். ஆனால், நான் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் நான் மன்னிப்பு கேட்டேன் என்றார்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களிலும் தீவிரவாதம் உள்ளது. இதனை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Trichy Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment