மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பதிவான சாதி பாகுபாடு தொடர்பான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை, மாநிலம், மற்றும் யூனியன் பிரதேசம் ஆண்டு வாரியாக விவரங்களைக் கேட்டு வி.சி.க எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார் பதிலளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதியின் எம்.பி-யுமான் டாக்டர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில், மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய சமூகநீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார் பதிலளித்துள்ளார். அதில், மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பதிவான சாதி பாகுபாடு தொடர்பான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை, மாநிலம், மற்றும் யூனியன் பிரதேசம் ஆண்டு வாரியாக விவரங்களை கோரிய ரவிக்குமார் எம்.பி-யின் கேள்விகளுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகள் குறித்த புகார்களின் விவரம் ஒன்றிய அரசிடம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்ச வீரேந்திர குமார் பதிலளித்துள்ளார்.
வி.சி.க எம்.பி ரவிக்குமார், நாடாளுமன்ற மக்களவையில் தான் எழுப்பிய கேள்விகள் குறித்தும் அதற்கு மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அளித்த பதில் குறித்த்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இன்று நாடாளுமன்ற மக்களவையில் பின்வரும் வினாக்களை ரவிக்குமார் எம்.பி எழுப்பினார்:
(அ) 2023, 2024 மற்றும் 2025 நிதியாண்டுகளில், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் (INIs) மற்றும் பணியிடங்களில் பதிவான சாதி பாகுபாடு தொடர்பான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை, மாநிலம், ஆண்டு மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக; மற்றும்
(ஆ) பணியிடங்களில் சாதி பாகுபாட்டைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நிதியாண்டு-25 இல் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்களைத் தருக?
*இந்தக் கேள்விகள் உடுக்குறியிட்ட கேள்விகளாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், நேரடியாகப் பதிலளிப்பதற்கு முன்பே கேள்வி நேரம் முடிந்துவிட்டதால் எழுத்துபூர்வமாகப் பதிலளித்த சமூகநீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார் ‘மத்திய பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், பணி இடங்களில் காட்டப்படும் சாதிய பாகுபாடுகள் குறித்து பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை ஒன்றிய அரசு சேகரிப்பதில்லை. எனினும், 2022-ம் ஆண்டு வரையிலான என்.சி.ஆர்.பி அறிக்கைகளில் இந்தியாவில் நிகழ்ந்த குற்றச் செயல்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
பி.சி.ஆர் சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நிதி உதவி அளிக்கிறது. 2024-25-ம் ஆண்டில் 05.03.2025 வரை பல்வேறு மாநிலங்களுக்கு 470.51 கோடி உதவித்தொகை (central assistance) வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அத்துடன் , மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட நிதி குறித்த பட்டியலையும் அளித்துள்ளார். அதில் மத்திய பிரதேசத்துக்கு 88.12 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு 89.49 கோடியும் தமிழ்நாட்டுக்கு 32.18 கோடியும் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*சாதிய பாகுபாட்டின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா பாயல் தத்வி ஆகியோரின் தாயார்கள் தொடுத்த வழக்கில் 2025 ஜனவரி 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட சாதி பாகுபாடு குறித்த மொத்த புகார்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்குமாறு யு.ஜி.சி-க்கு உத்தரவிட்டிருந்தது.
மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து 3522 பதில்களைப் பெற்றுள்ளதாக யு.ஜி.சி பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தது. அதில் 45 மத்திய பல்கலைக்கழகங்கள், 293 மாநில பல்கலைக்கழகங்கள், 269 தனியார் பல்கலைக்கழகங்கள், 103 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 2,812 கல்லூரிகள் அடங்கும் எனவும் கூறியிருந்தது. அவ்வாறு, பெறப்பட்ட புகார்களில் சாதி பாகுபாடு குறித்த புகார்களின் எண்ணிக்கை 1503 ஆகும். அவற்றில் 1426 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன” என்றும் யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் சமூகநீதி அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு எங்களிடம் விவரங்கள் இல்லை ( no data ) எனப் பதில் தரப்படுகிறது. இது நாடாளுமன்ற செயல்பாட்டை சிறுமைப்படுத்துவதாக உள்ளது.” என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.