தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான குடியரசுத் தலைவரின் நடவடிக்கையும் செல்லாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை நிலைநாட்ட தமிழ்நாடு தொடர்ந்து போராடும்” என ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மூலம் பல்கலைக் கழகங்களின் வேந்தரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை., சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுவார்.
முக்கியமான 10 மசோதாக்கள்:
1. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா
2. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா
3. வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா
4. தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா
5. மீன்வள பல்கலைக் கழக மசோதா
6. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா
7.தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா
8. தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா
9. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா
10. தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா