நவராத்திரியின் நிறைவு நாளாக வரக் கூடியது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்களது ஊர்களுக்கு பயணப்பட்டு உள்ளனர். இதனையொட்டி, தமிழக அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்கி வருகிறது. இதேபோல், தென்னக ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரம் - தஞ்சாவூர் இடையே இன்று (அக்டோபர் 11ம் தேதி) வெள்ளிக்கிழமை வார இறுதி விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - தஞ்சாவூர், தஞ்சாவூர்-தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, ரயில் எண். 06007, தாம்பரம் - தஞ்சாவூர் (12 பெட்டிகள்), முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (அதாவது, அக். 10 நள்ளிரவு) நள்ளிரவு 12.15 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் (1 சேவை) காலை 6.50 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.
இதேபோல், தஞ்சாவூர் - தாம்பரம் (12 பெட்டிகள்) ரயில் எண் 06008, தஞ்சாவூரில் இருந்து அக்டோபர் 11 (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“