scorecardresearch

பொய் சொன்னால் அறை விழும்; உ.பி முதல்வர் யோகி கருத்துக்கு சித்தார்த் காட்டம்

Actor siddharth slams yogi adhityanath false claims: சாதாரண மனிதாராக இருந்தாலும் சரி, புனிதராக இருந்தாலும் சரி, எந்த தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் அறை விழும்” என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

பொய் சொன்னால் அறை விழும்; உ.பி முதல்வர் யோகி கருத்துக்கு சித்தார்த் காட்டம்

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் இந்த இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதன் காரணமாக, பல மாநிலங்கள் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு  மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த இரண்டாவது அலையில் தொற்று பாதித்தவர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அவர்களுக்கு செயற்கையாக ஆக்ஸிஜன் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சில மாநிலங்களில் மருத்துவமனை படுக்கைகளுக்கும், ஆக்ஸிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறது. தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகள் காலி படுக்கைகள் இல்லாததால் ஏற்க மறுக்கின்றன. இதனால் சில இடங்களில் நோயாளிகளின் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருகின்றன.

அடுத்தாக கொரோனா முதல் அலையில் பெரிய பாதிப்புகளை சந்திக்காத, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசம் இந்த இரண்டாவது அலையில் அதிக தொற்று பாதிப்புகளையும், அதிக உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், உத்திரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது துளியும் இல்லை என்றும், மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதைக் கண்டித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.’மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறாக கூறுகின்றன அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என யோகி ஆதித்யநாத் கூறிய செய்தி ஒன்றினை மேற்கோளிட்டு, “சாதாரண மனிதாராக இருந்தாலும் சரி, புனிதராக இருந்தாலும் சரி, எந்த தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் அறை விழும்” என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை ட்விட்டரில் டேக் செய்து நீங்கள் கொரோனா போராளி அல்ல ‘கொரோனாவின் கூட்டாளி’ என்று சித்தார்த் விமர்சித்திருந்தார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த கருத்துகளுக்கு இணையத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Up cm yogi adhityanath comments oxygen demand siddharth slams in twitter