தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதலே மக்களவைத் தேர்தலில் இருந்தே திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக கட்சிகளுக்கு, சீட் பங்கீட்டில் திமுக மிகவும் குறைவான இடங்களை அளித்து கெடுபிடி காட்டினாலும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியில் தொடர்ந்து வருகின்றன. இதனால், காங்கிரஸ், இடதுசரிகள், மதிமுக விசிக சாதித்தது என்ன? என்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
தமிழ்நாடு 2019ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் 5 தேர்தல்களை சந்தித்டிருக்கிறது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலும், 2020ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலும், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலும் தற்போது 2022ம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என தமிழ்நாடு நான்கு ஆண்டுகளில் 5 தேர்தல்களை சந்தித்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் அரசியல் பிம்பங்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்தே அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியே ஆதிக்கம் செலுத்தி வெற்றி வாகை சூடி வருகிறது.
2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடியுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியின் பலத்திற்கு ஏற்ப இடங்களை வெற்றி பெற்றுள்ளார்களா? திமுக அளித்த இடங்களைப் பெற்றுகொண்டு இந்த கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சாதித்தது என்ன? என்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி மாலை 5 மணி நிலவரப்படி நகராட்சிகளில் 396 இடங்களில் போட்டியிட்டு 72 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 88 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 158 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல, விசிக தனிச் சின்னத்தில் போட்டியிட்டு நகராட்சி வார்டுகளில் 25 இடங்களில் வெற்றி பெற்றுளன. மாநகராட்சி வார்டுகளில் 14 இடங்களிலும் பேரூராட்சி வார்டுகளில் 70 இடங்களிலும் மதிமுக நகராட்சி வார்டுகளில் 34 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வசப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தங்களுக்கு குறைவான இடங்களை அளித்தாலும் தங்களுக்கு கொடுத்த இடங்களில் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒருவேளை, இந்த கட்சிகள் சீட் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாமல் தனித்து போட்டியிட்டிருந்தால் இந்த அளவில் இடங்களை வெற்றி பெற்றிருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இறுதியாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, சிறுத்தைகள் தங்களுக்கு கிடைத்த இடங்களில் சிறப்பாக செயல்பட்டு நிரூபித்துள்ளார்கள் என்பதே சரியாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.