நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் இடங்கள் பங்கீடு குறித்து, கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தாதது கூட்டணி கட்சி நிர்வாகிகளை விரக்தி அடையச் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டங்களில் இ.வி.எம் சரிப்பார்ப்பு பணிகளைத் நடத்தியுள்ளன. ஆனால், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்த முறையும் திமுக மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இடங்கள் பங்கீட்டை உறுதி செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணல்களையும் நடத்தி வருகிறது. ஆனால், திமுக மாவட்ட செயலாளர்கள் இன்னும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தையோ சந்திப்புகளையோ நடத்தவில்லை. அதனால், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் சொற்பமான இடங்களையே அளித்ததைப் போல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கடைசி நேரத்தில் ஓரிரு இடங்களை அளித்து சரிகட்டிவிடலாம் என்று நினைக்கிறது என்று திமுக கூட்டணியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத திமுக கூட்டணியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “திமுக நகப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்தான், திமுக மாவட்ட செயலாளர்கள் ஏன் இன்னும் இடங்கள் பங்கீடு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்று ஆதங்கத்திலும் புழுக்கத்திலும் உள்ளார்கள். ஆனால், திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் இதைப் பற்றி அழுத்தம் கொடுப்பதாகவோ, பேசுவதாகவோ தெரியவில்லை. ஏனென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது. திமுகவுக்கு என்னதான் அழுத்தம் கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது என்ற நிலையில் இருக்கிறார்கள். இதுவே திமுக இப்படி பெரிய அண்ணன் போக்கில் நடந்துகொள்வதற்கான முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல், சட்டமன்றத் தேர்தலின்போதே திமுக அப்படித்தான் நடந்துகொண்டது. பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால், இந்த முறை திமுகதான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் சொற்பமான இடங்களையே அளித்தது. அப்போதே கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்திருந்தால் திமுக இந்த அளவுக்கு இடங்கள் பங்கீட்டில் கெடுபிடியாக நடந்துகொண்டிருக்காது.
அதுமட்டுமில்லாமல், திமுகவின் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் சிலர், அமைச்சர்களாக உள்ள சில திமுக மாவட்ட செயலாளர்களைப் பார்த்து இடங்கள் பங்கீடு குறித்தும் தங்களுக்கு தேவையான இடங்கள் குறித்தும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள். கூட்டணி கட்சித் தலைமைகளும் இதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் இருப்பதால் கூட்டணி கட்சிகள் அணுசரித்து போக வேண்டிய நிலையில் உள்ளன. இதை எல்லாவற்றையும் தாண்டி, என்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் திமுக கொடுப்பதைத்தான் கொடுக்கும் என்ற விரக்தியான மனநிலையே நிலவுகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஓரிரு இடங்களை கொடுத்து முடித்துவிடலாம் என்ற மனநிலையில்தான் உள்ளது.” என்று கூறினார்.
திமுகவின் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், நாங்கள் எங்களுடைய கட்சியினரிடம் விருப்ப மனு பெற்றிருக்கிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் பங்கீடு குறித்து இத்தனை சதவீதம் வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் என இதுவரை கட்சி தலைமையில் இருந்து எந்த வழிகாட்டுதல்களும் வரவில்லை. அதே நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் எதுவும் அழைப்பு விடுக்க வில்லை. அதனால், நாங்களும் அவர்களை இன்னும் அணுகவில்லை என்று கூறினார்.
கூட்டணிக் கட்சிகள் எழுப்பியுள்ள கவலைகளுக்கு பதிலளித்த திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்ற கட்சித் தலைமை மாவட்ட நிர்வாகிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கட்சிக்கான வேட்பாளர்களை அடையாளம் காண்பது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க உதவும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், இடங்கள் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.