நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடுவதற்கு கட்சித் தொண்டர்களிடம் ஆளும் திமுக விண்ணப்பங்களைப் பெற்று வருவதால், இடங்களை பங்கீடு செய்வதை எதிர்ப்பார்த்திருக்கும் கூட்டணிக் கட்சிகளை திகைக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவும் அமமுகவும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் தங்கள் கட்சி தொண்டர்களிடம் விருப்பமனு விண்ணப்பங்களை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டு சுறுசுறுப்பாகியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் திமுக தலைமை தங்களுக்கான இடங்களை பங்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்து உள்ளனர். ஆனால், திமுகவின் மாநிலத் தலைமையகம் உட்பட பல மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று விருப்ப மனு விண்ணப்பங்களை வழங்கி வருகிறது.
திமுகவின் சென்னை (கிழக்கு), காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் அதிகாரப் பூர்வ நாளிதழான முரசொலியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்களாக போட்டியிட விரும்பும் தொண்டர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டனர். திங்கள்கிழமை முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை கட்சித் தொண்டர்கள் பெற்றுக்கொள்ளலாம் கேட்டுக் கொண்டனர்.
திமுக கூட்டணியில் உள்ள தேசியக் கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், “நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக என்ன செய்ததோ அதையேதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் செய்கிறது. திமுக கட்சி தொண்டர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று வேட்பாளர்களை நிறுத்தியது. எங்கள் கட்சி மாவட்டத் தலைவர்கள் சீட் பங்கீட்டில் அதிருப்தி தெரிவித்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக வழங்கும் சீட்களில் நாங்கள் திருப்தியடைய வேண்டியிருந்தது” என்று கூறினார்.
திமுக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போல இல்லாமல், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாராளமாக நடந்து கொள்ளும் என்று திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியின் மாவட்ட தலைவர் கூறினார்.
“ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தலின்போது திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடங்களை மட்டுமே அளித்தது. அதனால், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக இடங்களை ஒதுக்கும் என்று நம்புகிறோம். திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சி தொண்டர்களிடம் விண்ணப்பம் கேட்டு அறிவித்திருப்பது திமுகவில் வழக்கமான நடைமுறை” என்று கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கடி தொண்டர்களிம் விண்ணப்பங்கள் கேட்டு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறித்து திமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களிடம் கூறுகையில், “விண்ணப்பங்கள் கேட்பது என்பது ஒரு வழக்கமான நடைமுறை… எங்களுடைய கூட்டணி தொடர்கிறது. என்பதை எங்களுடைய தலைவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். கூட்டணி கட்சிகளின் உள்ளூர் பலத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு பிரச்சனையை அந்தந்த மாவட்டங்களிலேயே சுமுகமாக தீர்த்து வைக்கப்படும்” என்று கூறினார்.
இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிற காங்கிரஸ் உறுப்பினர்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படுகிற விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 1.12.2021 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தலில் போட்டியிட விரும்புகிற பொது பிரிவினர் ரூ.1,000 பட்டியலினத்தவர்கள் மற்றும் மகளிர் ரூ.500 என்கிற கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அன்றைய தேதியில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
சென்னை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அன்றைய தினம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை வழங்கலாம். இதை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக்கொள்வார்கள்” என்று அறிவித்துள்ளார்.
9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியடைந்த அதிமுக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சுறுசுறுப்படைந்து, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சித் தொண்டர்களிடம் விண்ணப்பங்களை வழங்கி விருப்ப மனு பெற்று வருகிறது. அதே போல, அமமுகவும் சுறுசுறுப்பாகி ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க களம் இறங்கியுள்ளது.
அதிமுக வட்டாரங்கள் கூறுகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறு மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதிமுக தலைமையால் வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டை வழங்கத் தவறினால், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இருவரும் எச்சரித்துள்ளனர். உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தன.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் புதன்கிழமை விண்ணப்பப் படிவங்களை அளிக்குமாறு அமமுக தலைமை தெரிவித்திருந்தது. கட்சி சீட்டுக் கோரி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாவட்டச் செயலாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை கட்சியின் வார்டு மற்றும் மாவட்ட அலகுகள் தொடங்க வேண்டும் என்ரு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக கூட்டணி கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர், நகராட்சித் தலைவர், மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், திமுக இந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தலை அதாவது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முடிவு எடுத்துள்ளது தெரிய வந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”