தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த இரு கூட்டணிகளுக்கு எதிராக பாமகவுக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பிப்ரவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாநிலத்தில் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் மும்முரமாக தயாராகி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திமுக கூட்டணியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகி தனித்து போட்டியிட்டது. அதனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என்பதால் அதிகவுக்கு பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியையும் தாம்பரம் மாநராட்சி மேயர் பதவியையும் எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேயர் பதவிக்கான தேர்தல் கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெறும் என்பதால் மேயர் வேட்பாளர் வெற்றி பெறும் கூட்டணியில் இருந்து இடம்பெறுவார்.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ, மதிமுக, ஐ.யு.எம்.எல் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள பிற சிறிய அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய திமுக தலைமையிலான கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணியைவிட முன்னிலையில் உள்ளது.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் வன்னியர்கள் செல்வாகைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், இன்னும் சில சிறு கட்சிகள் உள்ளன.
இருப்பினும், 2021ம் ஆண்டு நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணியில் பாமக போட்டியிடவில்லை. தொகுதிப் பங்கீடு செய்வதற்கு நேரம் இல்லை என்று கூறி தனித்து போட்டியிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளர். சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவியை எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கியதை டாக்டர் ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார்.
பாமக ஏற்கனவே தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. சில தொகுதிகளில் சிறிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியை எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி, அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் அதிக வாக்குகளைப் பெற்றது. பாமகவும் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளதால், பாமகவும் மற்ற சிறிய கட்சிகளுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விகள் தமிழக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக - நாம் தமிழர் கட்சி இடையே கூட்டணி ஏற்படுமா என்பது தேர்தலின்போதுதான் தெரியவரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.