Advertisment

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம்

அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ், அவ்வப்போது தனது இந்திய பூர்வீகத்தை பிரதிபலித்து வந்தார். குறிப்பாக, அவரது தாய் மற்றும் பாட்டியின் தாக்கம் அவரிடம் காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Kamala harris village

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்கு முன்னதாக, தமிழகத்தில் உள்ள ஓர் கிராமத்தில் சிறு எதிர்பார்ப்பு இருந்தது. கமலா ஹாரிஸின் மூதாதையர்கள் வாழ்ந்ததாக அறியப்படும் துளசேந்திரபுரம் கிராமத்தில், அவரது முந்தைய தேர்தல் பிரச்சாரங்களின் போது இருந்த பிரம்மாண்டம் தற்போது அங்கு இல்லை. ஆனாலும், அவரது வெற்றியை காண சிறு ஆர்வம் அந்த கிராமத்தில் குடிகொண்டுள்ளது .

Advertisment

கமலா ஹாரிஸின் தாயார் வழி தாத்தாவான பி.வி. கோபாலன், சென்னைக்கு குடியேறுவதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் தான் வசித்து வந்தார். அதன் பின்னர், ஸாம்பியாவுக்கான இந்திய தூதராக அவர் பணியாற்றினார். கமலா ஹாரிசின் தாயார் ஷியாமளா கோபாலன், பெரும்பாலும் இந்த கிராமத்தில் வசிக்கவில்லை. அதன்பின்னர், அமெரிக்காவில் அவர் கல்வி பயின்றார். சொந்த ஊருடன் கமலா ஹாரிசுக்கு நேரடியான தொடர்பு இல்லையென்றாலும் தனது குடும்பத்தினர் கூறிய கதைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக தனது பாரம்பரியத்தில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். 

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: In Tamil Nadu, Kamala Harris’s village awaits results — but not with bated breath

 

கடந்த திங்களன்று கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில், "என் தாயாரான ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் தனது 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்கவிற்கு வந்தார். எனக்கும், எனது சகோதரி மாயாவிற்கு அவர் தைரியம் மற்றும் உறுதியை கற்றுக் கொடுத்தார். அதுவே என்னை முன்னோக்கி வழிநடத்தியது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, 1960-களில் தனது பெற்றோர் சிவில் உரிமை போராட்டங்களில் பங்கெடுத்ததை நினைவுகூர்ந்த கமலா ஹாரிஸ், தனது சுயசரிதையான 'The Truths We Hold'-ல் அது குறித்து குறிப்பிட்டுள்ளார். "அலைகடலென திரண்ட மக்களின் ஆற்றல் மிகு கோஷங்கள் எனது பால்ய கால நினைவுகளில் நிறைந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தனது கறுப்பின அடையாளத்தை தழுவியதற்காக முதன்மையாக அறியப்பட்ட கமலா ஹாரிஸ், அவ்வப்போது தனது இந்திய பூர்வீகத்தை பிரதிபலித்து வந்தார். குறிப்பாக, தனது தாய் மற்றும் பாட்டியின் தாக்கம் அவரிடம் காணப்பட்டது. “என் தாயார், என் பாட்டியின் வலிமை மற்றும் தைரியத்தை பெற்றிருந்தார். என் தாயாரின் எழுத்துகள் சமூக நீதியை கொண்டிருந்தன. எங்கள் குடும்பத்தின் மரபும் அதுவாகவே இருந்தது“ என கமலா ஹாரிஸ் கூறியிருந்தார்.

ஷியாமளா தெற்காசியாவின் பூர்வீகத்தைக் கொண்டிருந்தாலும், இந்தியாவுடனான அவரது தொடர்பில் இடைவேளி காணப்பட்டது. கமலா ஹாரிசுக்கு, சித்தி போன்ற மிகச் சிறிய அளவிலான தமிழ் வார்த்தைகளே தெரியும் என அவரது உறவினர் சரளா கடந்த 2020-ஆம் ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்து நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்து புராணக் கதைகள், தென்னிந்திய கலாசாரம் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து கமலா ஹாரிசுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ள சரளா, கமலா ஹாரிஸ் தனது குழந்தை பருவத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட போது, அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் உற்சாகம் பரவியிருந்தது. ஆனால், அந்த உற்சாகம் தற்போது அங்கு காணப்படவில்லை. ஊடக கவனம் பெறாததாலும் அல்லது பிரச்சாரத்தில் ஏற்பட்ட இடைவேளி காரணமாகவோ கூட இது இருக்கலாம். மேலும், வாக்கெடுப்புக்கு முன்னதாக கிராமத்தில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாததால், தன்னால் தற்போது நேர்காணல் கொடுக்க முடியவில்லை என சரளா தெரிவித்துள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த 80 வயது நிரம்பிய ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால் அந்த ஊரில் கொண்டாட்டங்கள் இருக்கும் என்றார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக பிரார்த்தனைகள் மேற்கொள்வது குறித்து தனக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கமலா ஹாரிசின் தாத்தா சென்னை மற்றும் ஆப்பிரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு சிறிது காலம் இந்த ஊரில் தான் வசித்தார். கமலா ஹாரிசின் தாயாருக்கு இங்கு பெரிய அளவில் நெருக்கம் இருந்ததாக தெரியவில்லை. ஒருவேளை அவர் இங்கு வருகை தந்திருக்கலாம். எனினும், கமலா ஹாரிஸ் இங்கு வருகை தரவில்லை“ என அவர் தெரிவித்தார். 

கமலா ஹாரிஸ் கடந்த தேர்தலில் அமரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தான், அவருக்கும், இந்த ஊருக்கும் இடையேயான உறவை அறிந்து கொண்டதாக கிருஷ்ணமூர்த்து தெரிவித்துள்ளார். “கமலா ஹாரிஸ் குறித்து ஊடகத்தினர் எங்களிடம் கேள்வி எழுப்பிய போது தான், அவர் குறித்து நாங்கள் அறியத் தொடங்கினோம். தனிப்பட்ட முறையில் ட்ரம்ப் மற்றும் கமலா இருவருமே எனக்கு ஒன்று தான். எனினும், இந்த கிராமத்துடனான தூரத்து உறவு இருப்பதால், கமலா வெற்றிபெற்றால் எனக்கு மகிழ்ச்சி. மேலும், அவர் வெற்றிபெரும்பட்சத்தில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்“ எனக் கூறியுள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கமலா ஹாரிசின் உறவினர் சரளா தங்கள் கிராமத்திற்கு வந்து, கமலா ஹாரிஸ் பெயரில் 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியதால், அந்த உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டதாக கூறிய கிருஷ்ணமூர்த்தி, அதனால் தான் கோயில் கல்வெட்டில் அவரது பெயர் இடம்பெற்றதாக கூறியுள்ளார். கடந்த தேர்தலில் ஜோ பைடனுடன், கமலா ஹாரிஸ் பெயர் இடம்பெற்றபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கதை. முன்னர் துளசேந்திரபுரத்தில் 40 பிராமண குடும்பங்கள் வசித்தனர். தற்போது, 10 அல்லது 15-ஆக அது குறைந்து விட்டது. ஒருவேளை கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால், தீபாவளிக்கு வெடிக்காமல் மீதமிருக்கும் பட்டாசுகளை வெடித்து இங்கு கொண்டாட்டம் நடக்கலாம்“ என கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Us Kamala Harris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment