/indian-express-tamil/media/media_files/2025/09/03/us-tariff-hike-secular-progressive-alliance-protests-in-tiruppur-tamil-news-2025-09-03-12-54-25.jpg)
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் இரயில் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, முறையற்ற ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கொரோனா பேரிடர் போன்ற தொடர் சவால்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பின்னலாடைத் தொழில், தமிழ்நாடு அரசின் துரிதமான நடவடிக்கைகளின் பலனாக, பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் பழைய நிலையை எட்டிப்பிடித்து, ஆண்டுதோறும் 45,000 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதி வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு முன்னேறின.
இந்நிலையில், மத்திய பா.ஜ.க அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் இறக்குமதி மீது அதிரடியாக விதித்துள்ள 50% வரிவிதிப்பு என்பது பின்னலாடை நிறுவனங்கள் மீது பேரிடியாக விழுந்துள்ளது. பின்னலாடைத் தொழிலின் மையமாக விளங்கும் திருப்பூரில், சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டதோடு, 6 இலட்சம் நேரடி தொழிலாளர்களும், 3 இலட்சத்திற்கும் அதிகமான மறைமுக தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் ஆர்டர்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் முதலீட்டாளர்கள், அந்த ஆர்டர்களை வேறு நாடுகளுக்கு மாற்றி ஏற்றுமதி செய்ய இயலாத நிலையில் உள்ளனர். இதனால் முதலீட்டுக்காக பெற்ற வங்கிக் கடனையும் அதன் வட்டியையும் செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அமெரிக்க நிறுவனங்களின் ஆர்டர்கள் வேறு நாடுகளுக்கு மாறிச் சென்றுவிட்டால், அவற்றை மீண்டும் திருப்பிப் பெறுவது கடினமாகிவிடும் என்பதால், முதலீட்டாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் நெருக்கடியுடனும் நிற்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், திருப்பூர் பின்னலாடைத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு மேற்கொள்ள வேண்டும். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய பா.ஜ.க அரசு வரிச் சலுகை உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி., மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்., திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., ஐ.யூ.எம்.எல்.பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநிலத் துணைத் தலைவர் ஆர். தங்கவேலு, ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் இரா. அதியமான், பார்வர்ட் பிளாக் செயலாளர் எஸ். கர்ணன் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை முழக்கங்களுடன் வெளிப்படுத்தி, கண்டன உரையாற்றினர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.