/tamil-ie/media/media_files/uploads/2023/09/Train.jpg)
உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10ஆம் ஆண்டு விழாவை பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
திருச்சி-தஞ்சாவூர் - கும்பகோணம் - விழுப்புரம் ரயில் பாதை சுமார் 145 ஆண்டுகள் பழமையானது. இந்த பாதை வழியாக ராமேஸ்வரம், திருப்பதி, தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டதால் இந்த ரயில் தடம் மெயின் லயன் பாதை என அழைக்கப்படுகிறது.
இந்த மெயின் லயன் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது, சென்னை செல்லும் தஞ்சாவூர் மாவட்ட பயணிகளுக்கு முன்பதிவில் சுமார் 1400 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
2010ல் தஞ்சாவூர் - விழுப்புரம் மெயின் லைன் பாதை முழுவதும் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. அப்போது பகல் நேர சோழன் விரைவு ரயில் மற்றும் இரவு நேர போட் மெயில் ரயில் மட்டுமே இயக்கப்பட்டது.
இருப்பினும் முன்பிருந்த மீட்டர் கேஜ் காலத்தில் தஞ்சாவூர் மாவட்ட பயணிகளுக்கு கிடைத்து வந்த முன்பதிவு இருக்கைகள் குறைந்ததால் சென்னை செல்ல பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தஞ்சாவூர் -சென்னை இடையே புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்படும்
என 2013-ம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர்
1ம் தேதி முதல் உழவன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயிலை மத்திய நிதித்துறை முன்னாள் இணை அமைச்சர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் தஞ்சையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Train-Birthday.jpg)
இந்த ரயிலுக்கு பாபநாசம், கும்பகோணம் ரயில் நிலையங்களில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது 12 படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிரூட்டும் பெட்டிகள், 3 முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என 21 பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இந்த வண்டியில் கூடுதல் முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு வாய்ந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் திருச்சி பணிமனையில் தினந்தோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகளின் செல்ல ரயில் வண்டியாக கருதப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி முழு பயன் பாட்டுடன் காணப்படும்.
முன் பதிவில்லா பெட்டிகளில் இடம் பிடிக்க கும்பகோணம்-தஞ்சாவூர் இடையே உள்ள மக்கள் தஞ்சை நோக்கி செல்லும் பாசஞ்ஞர் ரயிலில் சென்று தஞ்சையில் இந்த ரயிலில் ஏறி பயணம் செய்து வருகிறது.
இப்படி பயணிகளின் அமோக ஆதரவை பெற்ற உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தின் 10ம் ஆண்டு நிறைவை தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்டோர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கும்பகோணம் ரயில் நிலையம் வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மலர் தூவி வரவேற்றனர். இன்ஜின் டிரைவர்கள் (லோகோ பைலட்) வெள்ளை பாண்டியன் மற்றும் சிவசக்தி குமரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
பயணிகள் அனைவருக்கும் ரயில் பயண விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் இனிப்புடன் கொடுக்கப்பட்டது. பின்னர் உழவன் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.கிரி, பொருளாளர் நடராஜகுமார், இணை செயலாளர் ஸ்ரீதரன், குடந்தை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்
சோழா சி.மகேந்திரன், செயலாளர் வி.சத்தியநாராயணன், பொருளாளர் மாணிக்கவாசகம், துணைத்தலைவர் ரமேஷ் ராஜா, துணைச் செயலாளர்கள் வேதம் முரளி அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள் கொத்தாசுதர்ஸன், இராமச்சந்திரராஜா பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், தஞ்சாவூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க செயலாளர் மனோகரன் ரயில் ஆர்வலர் தீபக்வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் தொண்டர்கள் உழவன் ரயிலை வரவேற்று ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.