ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் ம.நடராசன் இன்று காலை மருத்துவமனையில் காலமானார். காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையில் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் வைக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா. அவரது கணவர் ம.நடராசன். இவர் திராவிட முன்னேற்ற கழக கொள்கையில் தீவிரமாக இருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதன் பின்னர் திமுக ஆட்சியில் மக்கள் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.
அவருடைய மனைவி சசிகலா, ஜெயலலிதாவுடன் போயஸ்கார்டன் வீட்டில் தங்க ஆரம்பித்த பின்னர் அவர் அரசு பணியை விட்டு விலகினார். அதன் பின்னர் ‘தமிழரசி’, ’புதிய பார்வை’ இரண்டு இதழ்களை நடத்தி வந்தார். புதிய பார்வை ஆசிரியராகவும் இருந்தார். ஈழ தமிழர்களுக்காக எழுதியும் பேசியும் வந்தார்.
கடந்த ஆண்டு இவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நவம்பர் மாதம் வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அவர் உடல் பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் காலை 7 மணி முதல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பகல் 11 மணிக்கு உடல் அவரது சொந்த ஊரான, தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் உடல் நலம் இல்லாமல் இருப்பதையறிந்து, பரோல் கேட்டிருந்தார். இன்று அவருக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பரோல் கிடைத்ததும் அவரும் இறுதி சடங்கில் கலந்து கொள்வார்.
அமமுக கட்சியின் தலைவரான டிடிவி.தினகரன், ம.நடராஜனுக்கு நெருங்கிய உறவினர். அவர் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் தங்கியிருந்து, அவரின் உடல் நலனை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவருடைய மரணத்துக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் தொல்.திருமாவளவன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.