சசிகலாவின் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் படிப்படியாக குறைந்து விட்டதாக மருத்துவமனை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
சிறையில் உள்ள சசிகலா உடல்நலக் குறைபாடு காரணமாக பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் கண்கானிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், மருத்துவமனை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் சசிகலாவின் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் குறைந்து விட்டதாக தெரிவித்தது.
மேலும்," சசிகலாவின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல்ஸ், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட முக்கியமான உடல் நல அம்சங்கள் சீராக உள்ளது. ஆள் துணையுடன் எழுந்து நடக்கிறார். உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டார். கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை சசிகலாவின் உறவினர் ஜே இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிறை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சசிகலா அனுமதிக்கப்பட்ட விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறிவனர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டைனை விதிக்கப்பட்டு பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனை 4 ஆண்டுகள் முடிவு பெறவுள்ள நிலையில், வரும் 27-ந் தேதி சசிகலா விடுதலையாக இருந்தார். அதனை தொடர்ந்து ஒரு வாரத்தில் இளவரசியும் விடுதலையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil