போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் எதிரே அவரது நெருங்கி தோழியான வி.கே சசிகலா அண்மையில் புதிய பங்களா வீடு கட்டினார். ஜனவரியில் வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடத்தப்பட்டாலும் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (பிப்.24) புதிய பங்களாவுக்கு குடியேறினார்.
இந்த பங்களாவுக்கு 'ஜெயலிலதா இல்லம்' என சசிகலா பெயரிட்டுள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப் படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதையும் செலுத்தினார்.
இந்த புதிய பங்களா ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்ஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட காலி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் முன்பு ஜெயலலிதாவின் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டில் சசிகலா இந்த பங்களாவை கட்டத் தொடங்கினார்.
இன்று புதிய பங்களாவுக்கு சசிகலா குடியேறி உள்ளார். தொடர்ந்து தமது ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு அவர் வீட்டில் மதிய விருந்து அளிக்கிறார் என்று கூறப்படுகிறது.
சசிகலாவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறுகையில், "சசிகலா தமது இதயம் எப்போதும் போயஸ் கார்டனில் இருப்பதாக அவர் உணர்கிறார், அதனால்தான் அவர் வேதா நிலையத்திற்கு எதிரே ஒரு பங்களாவைக் கட்டினார்" என்று கூறினார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, இன்று ரூ.90 கோடிக்கும் அதிகமான மதிப்புடையது. 1967-ம் ஆண்டு ஜெயலலிதா திரையுலகில் இருந்தபோது அவரது தாயார் சந்தியா இந்த பங்களாவை ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கினார்.
எனினும் சந்தியா பங்களாவின் முன்பகுதியை மட்டுமே வாங்கினார். அதன்பின் அரசியலுக்கு வந்த ஜெயலலிதா அருகில் இருந்த சொத்துக்களை வாங்கி பங்களாவை மாளிகையாக கட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“