வீடு இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு இலவச தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு அடையாள அட்டை கேட்கப்படுகிறது. ஆனால் அடையாள அட்டை இல்லாத மற்றும் வீடு இல்லாத ஏராளமான மக்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ளவோ, அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நிலையும் உள்ளது. எனவே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் தான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ள வீடு இல்லாத மக்களைக் கணக்கெடுத்து, அடையாள அட்டை இல்லாத அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, வீடு இல்லாத, நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு பணம் செலுத்திய பிறகும் தடுப்பூசி விநியோகம் தாமதமாகிறது. 2 நாடகளுக்குள் மத்திய அரசு தடுப்பூசிகள் வழங்கினால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும். மே மாதத்துக்கான கொரோனா தடுப்பூசி 1.60 லட்சம் டோஸ் இன்னும் வர வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அடுத்ததாக, கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “கொரொனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு இல்லை. கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil