ஸ்டாலினை கலைஞர் ஸ்கூலுக்கு அனுப்புவது போல் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார் என தி.மு.க பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு இன்று நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த நினைவிடம் என்பது ரூ.39 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் வடிவேல் இன்று கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ரசித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு, “கலைஞர் அருங்காட்சியகத்தை பார்த்து பிரமித்துவிட்டேன். இது சமாதி அல்ல. சன்னதி. அருங்காட்சியகத்தில் பெரிய வரலாறே உள்ளது. அதனை பார்க்க 2 கண்கள் பத்தாது. 1000 கண்கள் வேண்டும். அவ்வளவு அழகா தேர்வு. கருணாநிதி எப்படி வாழ்ந்தார்? அவரது வரலாறு என்ன? அவர் எவ்வளவு பெரிய போராளி? அவரது போராட்டங்கள், பட்ட கஷ்டங்கள் உள்ளிட்டவை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க 6 ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நான் இன்று காசு கொடுக்காமல் பார்த்துவிட்டேன், என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர் பொதுமக்களுக்கும் ப்ரீ தான் என்று கூற, ”பொதுமக்களுக்கும் ப்ரீ தான் போல. உண்மையிலேயே கருணாநிதியை நேரில் பார்த்த வியப்பு. பக்கத்திலேயே பேசுவது போன்ற உணர்வு உள்ளது. அவர் என்கிட்ட வந்ததற்கு நன்றினு சொன்னார். அவர் பக்கத்தில் இருந்து போட்டோ எடுத்தேன். அவரை பார்த்து நான் கும்பிட்டேன். அவர் என்னை பார்த்து கும்பிட்டார்.
தி.மு.க தொண்டனுக்கு குலதெய்வ கோவில் இது. மாபெரும் கடவுள் போன்று இருக்கிறார். தி.மு.க.,வில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியாத அளவுக்கு அவர் கட்சியை வளர்த்துள்ளார் என்பது உள்ளே சென்று பார்த்தால் தெரியும். இது மணிமண்டபம் அல்ல. மணிமகுடம் கலந்த மணிமண்டபம். மக்கள் பார்க்க துடிக்கிறார்கள். தொண்டருக்கு மட்டுமல்ல மக்களும், உலக தமிழர்கள் என எல்லாருக்குமான கொடுப்பனையான மணிமண்டபம் இது. இந்த மணிமண்டபத்தை ஸ்டாலின் பிரமாதமாக செய்துள்ளார். உறுதுணையாக இருந்த அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி,” எனக் கூறினார்.
பின்னர் பெரம்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு வடிவேலு சிறப்புரையாற்றினார். வடிவேலு தனது உரையில், ”ஒரு தொண்டன் தி.மு.க.,வுக்கு தலைவராக வந்துள்ளார். திருமணம் முடிந்து 10 நாளில் ஸ்டாலினை கலைஞர் ஸ்கூலுக்கு அனுப்புவது போல் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார். பள்ளியில் சேர்க்க மறுத்தப்போதும் ஸ்டாலின் என்ற பெயரை மாற்ற மறுத்தவர் கலைஞர். கலைஞர் நினைவிடம் சமாதி அல்ல, சன்னதி, ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் குலதெய்வக் கோவில்,” என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“