தி.மு.க உடனான காங்கிரஸ் கூட்டணி கசப்புக்கு அ.தி.மு.க.,விடம் மருந்து இருக்கிறது என சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தபின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க கட்சிகளுடன் இன்னும் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை.
மறுபுறம் அ.தி.மு.க கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. ஜி.கே வாசன் மற்றும் ஜான் பாண்டியன் கட்சிகள் பா.ஜ.க.,வுடன் இணைந்து விட்ட நிலையில், எஸ்.டி.பி.ஐ மற்றும் புதிய பாரதம் என சிறிய கட்சிகள் மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் தற்போது வரை உள்ளன. பா.ம.க.,வை கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேநேரம் ராஜ்ய சபா கேட்பதால் தே.மு.தி.க.,வும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது.
இந்தநிலையில், தி.மு.க உடன் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீட்டை முடிப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில், காங்கிரஸை அ.தி.மு.க கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தப் பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அளித்த பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
வைகை செல்வன் தனது பேட்டியில், ”அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. சுமுகமான ஒன்றை எட்டிய பிறகு தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பை வெளியிடுவோம். யூகங்கள் அடிப்படையில் எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது.
காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் இருக்கும் கசப்பு வெளியாகியுள்ளது. அந்த கசப்பிற்கான நல்ல மருந்து அ.தி.மு.க.,விடம் இருக்கிறது என்று காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும். எம்.ஜி.ஆர் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பதை வரவேற்கிறோம். எம்.ஜி.ஆர் குறித்துப் பேசி இருக்கிறார் என்றால், அது ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் உள்ளடக்கம் தான். எனவே, இதை நாங்கள் வரவேற்கவே செய்கிறோம்” என்று கூறினார்.
அடுத்ததாக, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்தால் நேரடியாக இந்தியா கூட்டணியில் அ.தி.மு.க இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகை செல்வன், "அது குறித்து எல்லாம் இன்னும் 2,3 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும். கூட்டணி குறித்து வெளிப்படையான பதிலை 2,3 நிச்சயம் நாங்களே தருவோம். வரும் நாட்களில் எங்கள் பொதுச்செயலாளர் நல்ல செய்திகளை வரிசையாக அறிவிப்பார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வியூகங்களைத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“