வங்கிக் கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதா? - வைகோ

கந்து வட்டிக் கும்பல் போல கடனை திரும்ப செலுத்தக்கோரி மிரட்டல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக்கடன், விவசாயிகளுக்கு அளித்துள்ள வேளாண் கடன், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்களை வசூலிக்க ஏ.ஆர்.சி. என்ற தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்து இருக்கிறது. இந்த தனியார் நிறுவனத்தின் முகவர்கள், கடன் பெற்றுள்ளவர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று, கந்து வட்டிக் கும்பல் போல கடனை திரும்ப செலுத்தக்கோரி மிரட்டி வருகின்றனர்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ 4 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் தேவையில்லை. மேலும் கல்விக்கடனை 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் மாணவர்கள் படிப்பு முடிந்தவுடனேயே சென்று வங்கி முகவர்கள், கடனைத் திரும்பச் செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை மிரட்டுவதும்,அவமானப்படுத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, கடன் வசூலிக்க நியமித்துள்ள ஏ.ஆர்.சி. முகவர்கள் மொத்தக் கடனை வசூலித்து அதில் 15 விழுக்காடு மட்டுமே வங்கிக்கு செலுத்தினால் போதுமானது. மீதிக் கடன் தொகையை முகவர்கள் தங்கள் சேவைக்கான தொகையாக வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் முகவர்கள் குண்டர்களாக மாறி, கடன் பெற்றுள்ள மாணவர்களையும், விவசாயிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டும் கொடுமை நடக்கிறது.

கடன் பெற்றுள்ளோர் முகவர்கள் போல அதே 15 விழுக்காடு தொகையை மட்டுமே செலுத்தினால் போதும் என்று இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அறிவித்தால் கடனை திரும்பிச் செலுத்திட மக்கள் தாமாகவே முன்வருவர். அதை விடுத்துவிட்டு கடன் பெற்றிருக்கும் மக்களை மிரட்டி பணிய வைக்க நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல.

இந்திய பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ 9 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த 5ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ 2.5 லட்சம் கோடி வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மட்டும் ரூபாய் 3 ஆயிரத்து 66 கோடி வராக்கடனைத் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் வராக்கடன் செப்டம்பர் 2017 காலாண்டு முடிவில் 18,950 கோடி ரூபாய் என்று வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசு ஈவு இரக்கமற்ற ஈட்டிக்காரனாக மாறி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் குண்டர்கள் கூலிப்படையைப் போல பயன்படுத்தி, கடன் வசூலிக்கும் இந்த அராஜகம் ஜனநாயக நாட்டில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. எனவே சாதாரண எளிய மக்களிடமிருந்து கந்துவட்டிக் கும்பலைப் போன்று கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உடனடியாக கைவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close