மாணவ, மாணவியரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - வைகோ

சுற்றிலும் நின்றுகொண்டு மாணவி குதிப்பதைப் படம்பிடித்து இருக்கின்றார்கள்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் தனியார் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் நடந்த முறையற்ற பயிற்சிகளின் விளைவாக, மாணவி லோகேஸ்வரி உயிர் இழந்தார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எந்தவிதப் பயிற்சிகளும் பெறாத ஒரு பத்துப் பேர் கீழே ஒரு வலையைப் பிடித்துக் கொண்டு, இரண்டாவது மாடியில் இருந்து மாணவியைக் குதிக்கச் செய்துள்ளனர். தக்க பாதுகாப்பு எதுவும் இல்லாமல், வேடிக்கை விளையாட்டாக நடத்தி இருக்கின்றார்கள். அதனால் ஒரு உயிர் பலியாகி இருக்கின்றது.

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சிகள், தகுந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றனவா? அதற்கு அரசு ஒப்புதல் இருக்கின்றதா? தக்க கண்காணிப்புகள் இருக்கின்றனவா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

சுற்றிலும் நின்றுகொண்டு மாணவி குதிப்பதைப் படம்பிடித்து இருக்கின்றார்கள். அது சமூக வலைதளங்களில் பரவி இருக்கின்றது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் அலைபேசி பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். இல்லையேல் இதுபோல இன்னும் பல விபரீதங்கள் நேர்வதற்கு வாய்ப்பு உண்டு, எனவே, தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மாணவி லோகேஸ்வரியின் திடீர் மறைவால் துயருறும் அவரது பெற்றோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close