Advertisment

மீனவர்களுக்கு கானல்நீரான ஆழ்கடல் மீன்பிடி திட்டம் - வைகோ

பெருமுதலாளிகள் மட்டுமே கடற்கரைகளைக் கைப்பற்றி இறால் பண்ணை தொழில் செய்துவருகிறார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீனவர்களுக்கு கானல்நீரான ஆழ்கடல் மீன்பிடி திட்டம் - வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை கடற்படை உள்ளிட்ட பிரச்சனைகளில் துன்பப்படும் பாக் சலசந்தி மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 2016 இல் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவிற்கு இராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisment

இந்தத் திட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக 80 லட்சம் மதிப்பில் படகும், பரப்பு வலையும், தூண்டில், மீன்பிடி உபகரணங்கள் கொடுக்கப்படும் என்றும், திட்ட மதிப்பில் 50ரூ பணம் மத்திய அரசின் மானியமாகவும், 20ரூ மாநில அரசு மானியமாகவும், 20ரூ வங்கி கடனாகவும், 10ரூ மீனவர்கள் பங்களிப்பாகவும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீனவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புக்காட்டிய நிலையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எட்டா கனியாக பாரம்பரிய மீனவர்களுக்குத் தெரிகிறது.

ஏனெனில் விலைவாசி ஏற்றத்தின் நிமித்தம் அரசின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் திட்டத்தின் இன்றைய மதிப்பு 1கோடியே 10 லட்சத்தைத் தொடுகிறது, அரசு இதுசம்மந்தமாக மீனவர்களையும், படகுகள் கட்டும் நிறுவனங்களையும் அழைத்து 27 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த நிலையான தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசின் நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட 18 நிறுவனங்களும் அரசு கொடுத்துள்ள 80 லட்சம் திட்ட மதிப்பில் படகினை செய்யமுடியாது என கைவிரித்த நிலையில், எப்படியாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற நோக்கில், மிகவும் ஆர்வமுள்ள பணபலம் உள்ள சிலரை அழைத்துப் பேசி அதிகாரிகள் சம்மதிக்க வைத்துள்ளார்கள்.

இப்போதுள்ள நிலவரத்தின்படி மீன்பிடி உபகரணங்கள் தவிர்த்து படகு மற்றும் இஞ்சின் உள்ளிட்டவைகள் மட்டுமே அரசின் திட்ட மதிப்பீடான 80 லட்சத்தில் செய்து தருவதாக படகு தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே மீன்பிடி வலைகளும், சாதனங்களும் மீனவர்களே சொந்தப் பணத்தில் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்த பட்சம் 5 டன் வலைகளாவது இருக்கவேண்டும். இதன் மதிப்பு 25 லட்சம் மற்றும் சூறைமீன் தூண்டில் உபகரணங்களுக்கு 5 லட்சம் வேண்டும். ஆக மொத்தம் மேற்கொண்டு 30 லட்சம் வரை மீனவர்கள் செலவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். மொத்தத்தில் மீனவர் பங்களிப்பாக இந்தத் திட்டத்தில் வங்கிக் கடனாக 16 லட்சமும், திட்ட பங்களிப்பாக 8 லட்சமும், உபரி பங்களிப்பாக 30 லட்சமும் ஆக மொத்தம் 54 லட்சம் மீனவர்கள் முதலீடு செய்தால் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலை உள்ளது.

இலங்கை கடற்படையால் தனது படகினையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்க்கும் பாரம்பரிய மீனவர்களால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே இந்த ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது.

எனவே இந்தத் திட்ட மதிப்பினை 1 கோடியே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் அல்லது முன்பு இந்திய-நார்வே திட்டத்தின் கீழ் அரசாங்கமே படகுகள் கட்டி பாரம்பரிய மீனவர்களுக்கு கொடுத்தது போல் கொடுத்தால் மட்டுமே இந்தத் திட்டம் வெற்றிபெறும் என அரசிடமும், அரசு அதிகாரிகளிடமும் மீனவர்கள் முறையிட்டு வருகிறார்கள்.

ஆனால் இதற்கு மாறாக இந்த திட்டத்தை நீங்கள் செயல்படுத்த முன்வரவில்லை என்றால், இந்த திட்டத்தை பிற இடங்களில் உள்ள வணிக ரீதியான மீனவர்களிடம் கொடுத்துவிடுவோம் என்று அதிகாரிகள் பாக் சலசந்தி பாரம்பரிய மீனவர்களை நெருக்குகிறார்கள்.

ஏற்கனவே இறால் பண்ணைகள், மீனவர்களுக்கான மாற்றுமுறை மீன்பிடிப்பு முறை என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று பெருமுதலாளிகள் மட்டுமே கடற்கரைகளைக் கைப்பற்றி இறால் பண்ணை தொழில் செய்துவருகிறார்கள்.

அதுபோன்றே தற்போது பாரம்பரிய மீனவர்கள் செயல்படுத்த முடியாதவாறு ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அறிவித்து விட்டு, அதை மீனவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்று கூறி பாரம்பரிய மீனவர் அல்லாத பெருமுதலாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளை கொடுக்க அரசு முனைப்புகாட்டி வருகிறது.

மத்திய அரசின் கொள்கை முடிவின் படி பாக் சலசந்தியில் இலங்கை கடற்படையால் துன்பப்படும் பாரம்பரிய மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடி வழிமுறை ஏற்ப்படுத்தவும், பாக் சலசந்தி பகுதியில் இழுவைப் படகுகளைக் குறைத்து, கடல்வளத்தை பாதுகாக்கவுமே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவர்களைத் தவிர்த்து பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்ற உள்ளடி வேலைகள் விரைவாக நடக்கிறது.

எனவே மத்திய அரசு, பாரம்பரிய மீனவர்கள் பலன்பெறும் வகையில் திட்ட மதிப்பை 1கோடியே 10 லட்சத்துமாக மாற்றவேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி மீனவர்களுக்குக் கொடுக்கவேண்டும்" என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Vaiko Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment