ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும்! - வைகோ எச்சரிக்கை

அடிமைச் சேவகம் புரியும் தமிழக அரசைத் துணைக்கு வைத்துக் கொண்டு, அடக்குமுறையை ஏவி, மக்கள் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகின்றது. அது பகல்...

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து வைகோ : மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது வரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைப் பாலை மணல்வெளி ஆக்கும் மோடி அரசின் சதித்திட்டத்திற்கு நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற தகவல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடங்கி, தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கின்றது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி, இருபத்தி இரண்டு ஆண்டு காலமாக அந்தப் பகுதி மக்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகின்ற வேதாந்தா குழுமத்திற்கு, தமிழ்நாட்டில் இரு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கின்றது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகளும் தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வலிந்து செயல்படுத்த மத்திய பாஜக அரசு முனைந்து இருப்பது தமிழ் நாட்டின் மீது உள்ள மோடி அரசின் வன்மத்தைப் பறை சாற்றுகின்றது.

2018 ஜூலை 24-ல் மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை படிம எரிவாயு உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து ஒற்றை அனுமதி வழங்குவதற்காக திரவ மற்றும் வாயு வடிவிலான அனைத்து எரி பொருட்களையும் பெட்ரோலியம் என்றே அழைக்கலாம் என்று அரசு ஆணை வெளியிட்டது. அப்போதே வேதாந்தா நிறுவனம், தமிழகத்தில் காவிரி டெல்டாவில் இரு இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வைத் தொடங்க இருப்பதாக வெளிப்படையாகக் கூறியது. மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் எனப்படும் பாறை படிம எரிவாய்வு உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காவிரி தீரத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டக்களத்தில் இறங்கினர். ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.

காவிரி பாயும் மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சமவெளிதான் காவிரிப் படுகை ஆகும். இதுபோன்ற சமவெளிப் பகுதி ஆசியா கண்டத்திலேயே வேறு எங்கும் காண முடியாது. காவிரி டெல்டாவில் 28 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மூலம் பயிர் சாகுபடி நடக்கின்றது. கர்நாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து அடாவடியாக இருப்பதால் முன்பு 28 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய பரப்பு தற்போது 15 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது. தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை இடர்ப்பாடுகள், இடுபொருள்கள் விலை உயர்வு, ரசாயன உரங்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளையும் தாண்டி காவிரி டெல்டா விவசாயிகள் தமிழக மக்களுக்குத் தேவையான உணவு விளைச்சலுக்காகப் பாடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து காவிரி பாசனப் பகுதி மக்களை பஞ்சத்தில் தள்ளி வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த மண்ணை விட்டு ஏதிலிகளாக இடம்பெயரச் செய்ய மத்திய பாஜக அரசு சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றது. மோடி அரசின் இத்தகைய தமிழ்நாட்டு விரோத அநீதியான நடவடிக்கைகளுக்குத் துணை போய்க் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உறுதியாக எதிர்க்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 2018 மே 22 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதி வழியில் திரண்டு அரசின் கவனத்தை ஈர்க்க பேரணி நடத்திய போது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரின் உயிர்களை பலி வாங்கியது இந்த அரசு என்பதை தமிழக மக்கள் மறந்து விடவில்லை.

வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் அதை எதிர்க்க மக்களுக்கு துணிவு வரக்கூடாது என்பதற்காகத்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவப்பட்டதோ? என்ற ஐயம் எழுகின்றது.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து விட முடியாது. அடிமைச் சேவகம் புரியும் தமிழக அரசைத் துணைக்கு வைத்துக் கொண்டு, அடக்குமுறையை ஏவி, மக்கள் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகின்றது. அது பகல் கனவாகவே முடியும்.

மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இல்லையேல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கின்றேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close