நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட காப்புக்காடுகளின் மொத்த நிலத்தையும் திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அனுமதியை எதிர்க்க வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 'திட்ட நிறுவுதல்' அனுமதி அளிக்கக்கூடாது.
தமிழக அரசின் கீழ் செயல்படும் 'மாநில சுற்றுச்சூழல் தாக்கீது நிறுவனம்' நியூட்ரினோ திட்டத்தை 'கட்டிடம் மற்றும் கட்டுமானங்கள்' பிரிவின் கீழ் மதிப்பிட முடியாது என்று தெரிவித்து திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள டாட்டா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டது. அதற்குப் பல்வேறு அறிவியல்பூர்வமான காரணங்களையும் தெரிவித்திருந்தது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவோர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் சாதாரண கட்டிடம் கட்டுவதற்கான பிரிவின் கீழ் 'சுற்றுச்சூழல் அனுமதி' கேட்டு விண்ணப்பித்தனர். தமிழக அரசு எழுப்பியிருந்த எந்த ஆட்சேபணைகளுக்கும் விளக்கம் அளிக்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பிரிவு 8 கீழ் அனுமதி வழங்கியது.
சாதாரண கட்டிடம் கட்டுவது என்கிற பிரிவு மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வரும். மாநிலத்தின் “சுற்றுச்சூழல் தாக்கீது மதிப்பீட்டு நிறுவனம்” செயல்படாத சமயங்களில் தான் மத்திய அரசு இந்த பிரிவின் கீழ் அனுமதி வழங்க முடியும். இதில் எதையும் கணக்கில் கொள்ளாமல் அதிகார மமதையுடன் மத்திய அரசு “நியூட்ரினோ திட்டத்திற்காக” வழங்கிய அனுமதியை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து நடத்திவருகிறது. சட்டப்படி பார்த்தால் தமிழக அரசும் இந்த அனுமதியை எதிர்க்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ மௌனம் காக்கிறது. மத்திய அமைச்சகம் வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதி மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதால் மாநில அரசும் கடுமையாக எதிர்க்க வேண்டும். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இருக்கும் வரை இந்த திட்டத்திற்கான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் “திட்ட நிறுவுதல்” அனுமதியை வழங்காமல் வைத்திருந்தார். அவர் பெயரால் ஆட்சி செய்வதாக சொல்பவர்கள் தங்கள் உரிமைகள் பறிபோவது தெரியாமல் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யாமல் உள்ளனர்.
தமிழக அரசின் நிலைப்பாட்டையும் இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மதிக்காமல் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு எடுத்துள்ள இம்முடிவு மாநில சுயாட்சி உணர்வைக் கடுமையாகப் பாதிக்கும். இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையே கேள்விக்குறியாக்கும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்றும், மக்களிடம் கருத்து கேட்காமல் இத்திட்டத்திற்கென வழங்கப்பட்ட “காப்பு காடு”களின் மொத்த நிலத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.