தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓ.என்.ஜி.சி; மக்கள் நலனில் ஒண்ணுமில்லை! - வைகோ

காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக” அறிவிக்க வேண்டும்

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு காவிரி, டெல்டா மாவட்டங்களின் சூழலியலையும் வாழ்வாதாரங்களையும் அழித்துவரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் உடனடியாக வெளியேறவேண்டும்; டெல்டா மாவட்டங்களை “வேளாண் சிறப்பு மண்டலமாக“ அறிவிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் நீர் பங்கீடு குறித்த தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு குறைந்து விவசாயிகளின் வாழ்வில் இடியென இறங்கியுள்ள நிலையில், நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் நடைபெறாமல் பொய்த்துப்போகும் வகையில் உள்ளன ஓ.என்.ஜி.சியின் செயல்பாடுகள். இதுகாலம் நிலத்தடி நீரையும் விவசாயத்தையும் பாழடித்துவந்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், “சட்டத்திற்கு“ புறம்பாக செயல்படுவதாகவும் அறியமுடிகிறது.

தமிழ் நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சியின் முகமூடியை அகற்றும் வண்ணம் அந்த நிறுவனத்தின் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் மற்றும் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெட்டவெளிச்சமாக்கும் வகையில் ‘காவிரி டெல்டா வாட்ச்’ என்ற அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை முழுவதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பதில்கள் மற்றும் இணைய தரவுகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முறையான உரிமம்/அனுமதி இல்லாமல் ஓ.என்.ஜி.சி செயல்படுவதை அறிந்து கொள்ளமுடிகிறது. இதில் கூடுதல் அதிர்ச்சி, டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ஒரு கிணறுக்கு கூட முறையான “செயல்படும் அனுமதியை“ தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து ஓ.என்.ஜி.சி பெறவில்லை.

“ஆராய்ச்சி கிணறுகள், உற்பத்தி கிணறுகள் என எல்லாவற்றையும் சேர்த்து 700 கிணறுகள் உள்ளதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் அவற்றில் 219 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது. 183 கிணறுகளில் “உற்பத்தி” (production wells) நடைபெறுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் 71 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தங்களிடம் உள்ளதாக தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது, அந்த 71 கிணறுகளும் முறையான சட்டப்பூர்வமான “இயங்குவதற்கான அனுமதி” (consent    operate) கிடையாது.

சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கேள்விகேட்ட மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதும் அவர்களில் பலரை கைதுசெய்து சிறையில் தள்ளுவதும் என காவல் துறையின் செயல்பாடுகள் அத்துமீறியவை. சட்டத்தை நிலைநாட்டப் போராடும் மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவதன் மூலம் மாநில அரசும் இந்த அநீதிக்குத் துணை போகிறது.

எண்ணெய் கசிவுகள் ஏற்பட்ட நிலத்தையும் “உயிரியல் முறையில்” (bio -remediation) மீட்டுருவாக்கம் செய்து கொடுத்திருக்க வேண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனம், ஆனால் 10 வருடங்களுக்கு முன்னர் கசிவு நடந்த இடங்களைக்கூட எந்த மீட்டுருவாக்கப் பணிகளையும் செய்யாமல் அப்படியே விட்டுவைத்துள்ளது ஓ.என்.ஜி.சி.
எண்ணெய் கசிவோ, அல்லது வாயு கசிவோ நிகழ்ந்தால் மக்கள் எப்படி அவற்றை கையாளவேண்டும் என்று மக்களுக்கு போதிய பயிற்சிகளை கொடுக்காததன் விளைவு “கதிராமங்கலத்தில்” காண முடிந்தது.

விபத்து ஏற்பட்டவுடன் அந்தப் பகுதியை நோக்கி மக்களும் காவல் துறையினரும் சென்றது பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும். காவல் துறையினருக்குக் கூட “பாதுகாப்புக் கவசங்கள்” (safety masks) இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. கசிவு ஏற்பட்டால் குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்கிற “அறிவிப்பு பலகைகள்” மட்டுமே அங்குள்ளன. கசிவுகளைக் கண்டறிய உதவும் “உணர்விகளை” (sensors) ஒரு இடத்தில் கூட காணமுடியாது.

ஓ.என்.ஜி.சி தன்னை சர்வேதேச தரத்துடன் செயல்படுவதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் ஒரு விசயத்தில் கூட “மக்கள் நலனை” முக்கியமாக வைத்துச் செயல்பட்டதாக தரவுகள் கிடையாது. சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் அனைத்துக் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக” அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close