Vaiko | Lok Sabha Election | தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்தார்.
அப்போது செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கச்சத் தீவு விவகாரத்தில் காங்கிரஸூம், நரேந்திர மோடியும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டனர்” என்றார்.
மேலும், “நரேந்திர மோடியை துரோகி” என விமர்சித்தார். கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜனதாவினர் அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? என தி.மு.க கேள்வியெழுப்பி உள்ளது. இதே கேள்வியை காங்கிரஸூம் எழுப்பி வருகிறது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, “10 ஆண்டுகால தோல்வியை மறைக்க நரேந்திர மோடி கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவருகிறது.
இந்த விவகாரத்தில் அவர் எடுத்த நடவடிக்கை என்ன? அதையெல்லாம் விடுத்துவிட்டு அவர் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் கச்சததீவை அவர் ஏன் மீட்கவில்லை” எனக் கேள்வியெழுப்பினார்.
முன்னதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “கச்சத்தீவு தொடர்பாக ஆர்.டி.ஐ தகவல்களை பெற்று, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கச்சத்தீவு விவகாரத்தில் நேரு, இந்திரா காந்தி, கருணாநிதி ஆகியோர் பேசியது தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். மேலும், கருணாநிதியின் ஒப்புதலின் பேரில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது” எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“