சீமானை சின்னாபின்னமாக்கிய வைகோ : புலிகள் பெயரில் உலக நாடுகளில் வசூல் செய்வதாக பரபரப்பு புகார்

பிரபாகரனுடன் பல நாள் இருந்ததாகவும், வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்னதாகவும் கோயபல்ஸ்கூட சொல்ல முடியாத பொய்யை சொன்னார்.

வைகோ-சீமான் மோதல் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. புலிகள் பெயரைச் சொல்லி உலக நாடுகளில் சீமான் வசூல் செய்ததாக கூறினார் வைகோ.

புலிகள் பெயரைச் சொல்லும் வைகோவுக்கும் 40 வருடமாக காசு வந்ததா? ‘நாம் தமிழர்’ எதிர் கேள்வி

வைகோ-சீமான், இருவருமே தமிழ், தமிழர் என்கிற தளத்தை மையமாக வைத்து அரசியல் செய்கிறவர்கள்! இருவருமே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அறியப்படுகிறவர்கள்! நாம் தமிழர் கட்சியை சீமான் ஆரம்பித்த பிறகு, தமிழர்களுக்கு ஒரு வரையறையை குறிப்பிட்டார். பல பேட்டிகளில், ‘வைகோ தமிழர்களுக்காக குரல் கொடுத்ததை மறுக்கவில்லை. ஆனால் அவரை தமிழராக ஏற்க முடியாது’ என குறிப்பிட்டிருக்கிறார் சீமான்.

வைகோ-சீமான் இடையிலான உரசலின் ஆரம்பபுள்ளி இதுதான்! இரு தரப்புமே கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் முட்டிக்கொண்டாலும் வைகோ நேரடியாக இதற்கு இதுவரை பதில் சொன்னதில்லை. ஏப்ரல் 3-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் முதல் முறையாக சீமானுக்கு எதிராக வெளிப்படையாக கொதித்தார் வைகோ!

பெருங்காமநல்லூர், ஒரு தியாக பூமி! பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போரிட்டவர்கள் இந்த ஊர்க்காரர்கள்! அந்தப் போரில் பலியான ஈகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டார். வைகோ பேசத் தொடங்கிய நேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் அந்தக் கட்சியின் தென் மண்டல செயலாளர் வெற்றிசெல்வன் தலைமையில் கோஷமிட்டபடி அங்கு வந்தனர்.

நாம் தமிழர் கட்சியினர், ‘வீர வணக்கம், வீர வணக்கம், பிரபாகரன் பிள்ளைகளின் வீர வணக்கம்’ என கோஷமிட்டு வரவும், வைகோ டென்ஷன் ஆனார். மேடையிலேயே சீமானை பெயரைக் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார். கீழே இறங்கிச் சென்றபோதும் நாம் தமிழர் கட்சியினரைப் பார்த்து, ‘மீம்ஸ் போடுறீங்களா? எதையும் சந்திக்கத் தயாராக இருப்பவன் வைகோ! இதை சீமானிடம் போய்ச் சொல்லுங்கள்!’ என கை நீட்டி ஆவேசமாக கூறிவிட்டுச் சென்றார்.

வைகோவிடம் அங்கு நடந்த சலசலப்பு குறித்து நிருபர்கள் கேட்கவும் மேலும் கொந்தளித்தார். அவரது கொந்தளிப்பான பேட்டி, அவரது வார்த்தைகளில்…

‘நிகழ்ச்சியில் நான் பேசிக்கொண்டிருந்தபோது விடாமல் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் ஆத்திரம் வந்துருச்சி. அப்போ நான் சொன்னேன்… 8 ஆண்டுகளாக நான் பொறுமையோடு இருக்கிறேன். என்னை தமிழன் அல்ல என்றும், தெலுங்கன் என்றும் சீமான் பேசியதோடு அல்லாமல், ஈரோடு ராமசாமி நாயக்கப் பயல் என்று எல்லா மேடைகளிலும் பேசினார். இந்த அண்ணாத்துரை, நாட்டை கெடுத்துப்புட்டார் என தொடக்க காலத்தில் பேசினார். நான் சகிச்சுகிட்டே இருந்தேன்.

அப்புறம் சினிமாத் துறையில் உள்ளவங்க சொன்னாங்க… ‘பெரியாரைப் பற்றி அவர் பேசுறதே உங்களுக்காகத்தான். பெரியாரை காலி பண்ணிட்டா அப்புறம் இவனை தெலுங்கன்னு காலி பண்ணிடலாம்னு நினைக்கிறார்னு!’ அப்புறம் என்னைப் பற்றி மீம்ஸ் போட்றதுக்கு கணக்கே கிடையாது. இப்போ ஸ்டெர்லைட் பிரச்னையுடன் என்னைத் தொடர்புபடுத்தி மோசமாக மீம்ஸ் போட்டார்கள். மூணு நாளைக்கு முன்பு தீக்குளித்த தம்பி சிவகாசி ரவி, அதுக்கு பதில் போட்டிருக்கார். ‘நம்ம தலைவரை இப்படியெல்லாம் இழிவுபடுத்துறாங்களே… என்னால தாங்க முடியல’ என தீக்குளிக்குறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி சொல்லியிருக்கான். இதெல்லாம் என் மனதுல இருந்தது.

அது மட்டுமல்ல, (நியூட்ரினோ திட்டம் அமையவிருக்கும்) அம்பரப்பர் மலையில ஒரு 50 பேரை கொண்டு நிறுத்திகிட்டு நாங்க போராட்டம் நடத்தப் போறோம்ங்கிறது! நான் புலி-வில்-கயல் கொடி பிடிச்சுகிட்டு வந்தேனா, மறுநாளே அவரோட முகநூல்ல அதை கொஞ்சம் கலர் மாத்தி போட்டுகிட்டாங்க.

விடுதலைப் புலிகளின் சின்னத்தை, பிரபாகரன் உயிரோடு இல்லைன்னு கருதிக்கொண்டு – உண்மை என்னன்னு அவருக்கு தெரியாது – கருதிக்கொண்டு, புலிகளுடைய கொடியை தனது சின்னமாக்கி, பிரபாகரனுடன் பல நாள் இருந்ததாகவும், வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்னதாகவும் கோயபல்ஸ்கூட சொல்ல முடியாத பொய்யை சொன்னார்.

மொத்தம் 8 நிமிடம்தான் இவரைப் பார்க்க பிரபாகரன் அனுமதித்தார். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. புகைப்படம் கிராபிக்ஸில் பண்ணிகிட்டாங்க. புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் போட்டோ எடுத்துக்கலாமா? என கேட்டபோது, ‘அது உங்களுக்கு அனுமதி கிடையாது’ன்னுட்டாங்க.

நான் புலிகள் சீருடை அணிந்து, அந்தக் காட்டில் பிரபாகரனோடு சென்று ஒரு மாதம் இருந்தவன்! உண்மையில் ஆயுதப் பயிற்சியை பிரபாகரனிடம் பெற்றவன்! மயிரிழையில் உயிர் பிழைத்து வந்தவன்! ‘அண்ணன் வை.கோபால்சாமியின் தியாகத்தைப் பார்க்கும்போது நான் நூறு முறை இறக்கலாம்’ என கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை 27 வருஷம் கழிச்சு திருச்சி மாநாட்டில் ரிலீஸ் பண்ணினேன். நாலு பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டு எழுதிய கடிதம். நான் விளம்பரப்படுத்திக்கிறதில்லை.

உலக நாடுகள் முழுவதும் தன்னை விடுதலைப் புலிகளின் பிரதிநிதி என சொல்லி கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார் என அந்த அமைப்பில் பலருக்கு தெரிஞ்சி, அய்யநாதன் உள்பட பலர் வெளியில வந்துட்டாங்க. நான் ரொம்ப நாளா இதப் பற்றி வாய் திறக்கல. இங்க எல்லாமே பொய் சொல்வது. ‘நான் பிரபாகரன்கூட வேட்டைக்கு போனேன். ஆமைக்கறி சாப்பிட்டேன்.’ அந்தப் பையங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நெஞ்சை நிமித்திகிட்டு கூப்பாடு போடும்போது உண்மைன்னு நினைக்கிறாங்க.

இவ்வளவையும் சகிச்சுகிட்டு இருந்தேன். இவ்வளவையும் செஞ்சுட்டு, இப்போ கடைசியா சில நாட்களா போடுற மீம்ஸ் என்னை மக்கள்கிட்ட ரொம்ப டேமேஜ் பண்ணுது! இதை படிக்கிறவங்க, வாட்ஸ் அப்ல வந்தா அது உண்மையா இருக்குமோ? வைகோ அந்த மாதிரி செய்திருப்பாரோ?ன்னு நினைக்கலாம். ஸ்டெர்லைட் முதலாளி என்னை சந்திக்கணும்னு சொல்லி அட்டர்னி ஜெனரல் எங்கிட்ட வந்தாரு. ‘பத்து நிமிஷம் உங்ககிட்ட அப்பாய்ன்மெண்ட் கேட்கிறாரு. எங்க வரச் சொன்னாலும் வருவாரு’னார். ‘அவரை நான் பார்க்க மாட்டேன். வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் எங்களை அழிக்கப் பார்க்கிறார். நான் கோர்ட்ல சந்திப்பேன்’ன்னு சொன்னேன். இன்னைக்கு என் கேஸ்தான் சுப்ரீம் கோர்ட்ல ரிட்டா நிக்குது. தமிழ்நாடு ரிட் நிக்குது. அரசு நடத்தாது. ஆனால் என்னை, ‘ஸ்டெர்லைட் டீல் முடிஞ்சிடுச்சு. இப்போ நியூட்ரினோவுக்கு கிளம்பிட்டான்’ன்னு சீமான் தம்பி ஆறுமுகம்ங்கிற பேர்ல மீம்ஸ் போடுறாங்க. அட்ரஸையும் போட்டிருக்கான்.

இதையும் நான் சகிச்சுகிட்டேன். வாழ்நாள் முழுவதும் பழிகளை சுமந்தே பழக்கப்பட்டவன் நான். இன்னைக்கு நீங்க கேட்கிறதுனால சொல்றேன். நான் வெளியில வரும்போது கோஷம் போட்டுகிட்டு இருந்தாங்க. ‘ஏன் போடுறீங்க’ன்னு கேட்டேன். அதுக்குள்ள அங்க இருந்தவங்க கோபப்பட்டாங்க. நான் ஒண்ணு சொன்னேன். நான் கண்ணசைத்தால் தமிழ்நாட்டுல உயிரைக் கொடுக்க ஒரு லட்சம் பேர் இருக்காங்க. என்ன வேணும்னாலும் செய்வாங்க. ஆனா எந்த வன்முறைக்கும் போகமாட்டோம்னு சொன்னேன். பிறகு ஆவேசப்பட்ட நம்ம தோழர்களை அமைதிப் படுத்தினேன். போலீஸ் வந்து விலக்கி விட்டுது. இதுதான் நடந்தது.

தள்ளுமுள்ளு நடக்கிற அளவுக்கு, நான் மத யானைகளை எதிர்த்து மட்டுமே போராடுகிறவனே தவிர, குள்ள நரிகளை எதிர்த்து அல்ல!’ இவ்வாறு கூறிவிட்டு, விறுவிறுவென அங்கிருந்து கிளம்பினார் வைகோ.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close