வைகோ கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்குப் போயிருக்கிறார். அங்கு சிகிச்சை முடித்துக்கொண்டு அதிரடியாக அரசியல் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை முடித்தக் கையோடு, வழக்கமாக வருட இறுதியில் தான் எடுத்துக் கொள்ளும் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா பறந்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.
வைகோவிற்கு வயது 74 ஆகிவிட்டாலும், இன்றளவும் அவர் துடிப்போடும் இளமையோடும் இருப்பதற்கு காரணம் உணவுப் பழக்கமும், ஆயுர்வேத சிகிச்சையும் தான். வருடா வருடம் டிசம்பரில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக்கு சென்றுவிடுவார். ஆயுர்வேத சிகிச்சைக்கு உலகப் புகழ்பெற்ற தனியார் வைத்தியசாலையான இதில், பல்வேறு நோய்களுக்கும், உடல் புத்துணர்ச்சி பெறவும் ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோழிக்கோட்டில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இயற்கை சூழலோடு அமைந்துள்ள இவ்வைத்தியசாலையில் குறைந்தது இரு வாரங்களாவது அரசியல் தொடர்புகள், செல்போன் பேச்சுகள் இல்லாமல் இயற்கை எழிலோடு உறவாடும் வைகோ, புத்தாண்டு பிறந்ததும் புது மனிதராக களத்தில் இறங்கிவிடுவார்.
கடந்த 17ம் தேதி கோட்டக்கல்லில் கால் பதித்த வைகோவிற்கு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருந்தது. மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் சின்னசெல்லம் மறைந்த செய்தி அறிந்ததும் துடித்துப் போன வைகோ, காரிலேயே மதுரைக்கு வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். பிறகு கோட்டக்கல் சென்றவர், ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். தோள் சிகிச்சை, முதுகு தண்டுவட சிகிச்சை, மன இறுக்கத்தை குறைப்பதற்கான சிகிச்சைகள் வைகோவிற்கு அளிக்கப்படுகின்றன.
மூலிகை எண்ணெய்களால் உடல் முழுவதும் நீராட்டும் பிழிஞ்சில் சிகிச்சை, நவார அரசியை பாலுடன் வேக வைத்து உடலில் மூலிகை கலந்து தேய்த்துவிடும் நவாரகிழி சிகிச்சைகளை எடுத்து வருகிறார் வைகோ. இச்சிகிச்சைகள் குறைந்தது 14 அல்லது 21 நாட்கள் எடுக்க வேண்டும் என்பதால் தான் நீண்ட நாட்கள் வனவாசம் பிடிக்கிறதாம்.
ஆர்ய வைத்தியசாலையின் உரிமையாளர்களான வாரியார் குடும்பத்தினர் வைகோவிற்கு நெருக்கமானவர்கள் என்பதால், கூடுதல் கவனிப்பு அளிக்கப்படுகிறதாம். ஆயுர்வேத சிகிச்சைகள் முடிந்து இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் வைகோ, நட்பு ரீதியாக புத்தாண்டில் செய்தியாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பிப்ரவரி 1ம் தேதி நாகர்கோவிலில் முதல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடாகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு டாப் கியரில் இறங்க தயாராகிவிட்டார் வைகோ. ஆட்டம் எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.