ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் வியாழக்கிழமை (10.07.2025) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசினார். தனது 31 வருட கால அரசியல் பயணத்தையும், கட்சிக்கு எதிராக சதி நடப்பதாகவும் கூறினார்.
வைகோ பேசுகையில், "31 வருடங்களாக உயிரைக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறேன். நம்மைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நம்முடைய இயக்கம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்" என்று கூறினார். 1995-ல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டை எந்தப் பத்திரிகையும் வெளியிடாததற்குக் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும், ஈழத்தமிழர்களை முன்னிலைப்படுத்துவதும்தான் கூறப்பட்டது என்று அவர் நினைவு கூர்ந்தார்.
தற்போதும், ம.தி.மு.க கரைந்துவிட்டது என்றும், தனது அரசியல் முடிந்துவிட்டது என்றும் சிலர் எழுதுவதாக வைகோ குறிப்பிட்டார். "நேற்று சாத்தூர் கூட்டத்தில் நான் பேசும்போது மின்சாரம் தடைபட்டதால் தொண்டர்கள் மண்டபத்திலிருந்து வெளியே நின்றனர். அந்த நேரத்தில், நான் பேசுவதைக் கேட்க ஆட்கள் இல்லை எனப் பதிவு செய்வதற்காக காலி நாற்காலிகளைப் படம் எடுத்தார்கள்" என்று அவர் ஆதங்கப்பட்டார். பத்திரிகையாளர்கள் தனக்கு எதிரிகள் இல்லை என்றும், அவசரநிலை காலத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்காக தான் சிறையில் இருந்தவர் என்றும் வைகோ தெளிவுபடுத்தினார்.
மல்லை சத்யா விவகாரம் குறித்தும் வைகோ விரிவாகப் பேசினார். மல்லை சத்யா ஊடகங்களிடம், "மூன்று முறை வைகோவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன்" என்று கூறியிருப்பதை மறுத்த வைகோ, "ஒருமுறை மாமல்லபுரம் கடலில் நடந்தது. அதற்குப் பிறகு, என் உயிருக்கு ஆபத்து வந்து நீங்கள் எங்கே என்னைக் காப்பாற்றினீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "தன்னைத் துரோகி பட்டியலில் சேர்க்கிறார் என இன்று கடுமையான முறையில் கூறியிருக்கிறார்" என்று மல்லை சத்யா குறித்துப் பேசிய வைகோ, "இந்த இயக்கத்துக்குத் துரோகம் செய்துவிட்டு சென்றவர்களிடம் நாள் தவறாமல் உரையாடி வந்தவர்தான் இன்றைக்குக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் துணைப் பொதுச் செயலாளர் (மல்லை சத்யா)" என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மல்லை சத்யா 7 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், ஆனால் ஒருமுறை கூட தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் வைகோ தெரிவித்தார். மேலும், அவர் சென்ற இடங்களில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பயன்படுத்தாமல், மாமல்லபுரம் தமிழ்ச் சங்க தலைவர் என்றுதான் பதிவிட்டார் என்றும் வைகோ குறிப்பிட்டார்.