Advertisment

கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கிறீர்கள்… சீறிய வைகோ; நலம் விசாரித்த மோடி

இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள் என்று வைகோ மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

author-image
WebDesk
New Update
vaiko criticises central govt, vaiko, all party meeting in paliament, வைகோ, வைகோ விமர்சனம், மத்திய அரசு மீது வைகோ விமர்சனம், கூட்டாட்சிக்கு ஆபத்து, பிரதமர் மோடி, பாஜக, மதிமுக, mdmk, federal govt, vaiko speaks, pm modi inquires vaiko's health, central govt, union govt

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்ய சபா எம்.பியுமான வைகோ இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ஆனாலும், கூட்டத்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி, வைகோவின் அருகே வந்து நலம் விசாரித்தது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கத்தில், இன்று (ஜூலை 18) அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்பாடு செய்து இருந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். மாநிலங்கள் அவை முன்னவர் பியுஷ் கோயல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நிறைவு பெறுகின்ற வேளையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் வந்து பங்கேற்றார்.

இந்த கூட்டம் முடிகின்ற வேளையில் பேசிய பிரகலாத் ஜோஷி கட்சிகளின் உறுப்பினர்களைப் பார்த்து, குறைந்த நேரம் பேசுங்கள் என்று சொன்னபோது அதற்கு வைகோ எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து, அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளார் வைகோ பேசியதாவது: “இந்தக் கூட்டத்தில் ஒரு கட்சிக்கு ஒருவரைத்தான் பேச அனுமதித்திருக்க வேண்டும். பல கட்சிகளில் இரண்டு உறுப்பினர்களைப் பேச அனுமதித்தீர்கள்.

அதனால், எங்களைப் போன்ற மற்ற கட்சிகளுக்கு நேரத்தைக் குறைக்கின்றீர்கள்.

இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள்.

சமூக நீதியை, சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கின்றீர்கள்.

எண்ணற்ற தலைவர்களும், தொண்டர்களும் எத்தனையோ தியாகங்கள் செய்து விடுதலை பெற்றோம்.

இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் என்றால், இன்றைய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும்.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு,ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றீர்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், நீட் தேர்வு 13 மாணவ, மாணவியரின் உயிர்களைப் பறித்து விட்டது.

காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

கொழுந்து விட்டு எரிகின்ற மேகே தாட்டு அணைப் பிரச்சினையில், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துக் கருத்துச் சொல்ல, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.°டாலின் அவர்கள் ஒரு குழுவை அனுப்பினார். நானும் அந்தக் குழுவில் இடம் பெற்றேன். மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று, அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சொன்னார். ஆனால், கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியைச் சந்திக்கின்றார். மேகேதாட்டுஅணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார்.

முயலோடு சேர்ந்து ஓடுவது, வேட்டை நாயோடு சேர்ந்து துரத்துவது போன்ற அணுகுமுறையை, ஒன்றிய அரசு பின்பற்றி வருகின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தைக் காக்கின்ற அணுகுமுறை வேண்டும்.” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

publive-image

கூட்டம் முடிந்தவுடன், வைகோ அவர்கள் அருகில் வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வைகோ அவர்களிடம் உடல் நலம் விசாரித்தார்.

மத்திய அரசை வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசினாலும், கூட்டம் முடிந்தவுடன், வைகோ அருகில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார் என்பது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Narendra Modi Vaiko Mdmk Chief Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment