இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானார். அவர் இலங்கையின் அதிபராக பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவரை இந்தியா வருவதற்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபயராஜபக்ச இன்று இந்தியா வருகிறார்.
கோத்தபய ராஜபக்ச, அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ச இலங்கை அதிபராக இருந்தபோது, பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். இலங்கையில் 2009 இல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரில் புலிகள் தோல்வியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.
இலங்கை இறுதிப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதில், தற்போது இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்ச, அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ச மீது ஐ.நா.வில் போர்க்குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கையில், ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பது அங்குள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுப்பான்மையினர் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போருக்குப் பிறகு, இலங்கை அதிபர்கள் இந்தியா வரும்போது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற்றுள்ள கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். கோத்தபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ தலைமையில் மதிமுகவினர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர்களை படுகொலை செய்த கோத்த ராஜபக்சவை இந்தியாவுக்கு வருவதை அனுமதிக்க கூடாது என்று கையில் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தமிழகர்கள் தனக்கு ஓட்டு போடவில்லை என்பதை மறைமுகமாக சிங்களவர்கள் ஓட்டில்தான் தான் ஜனாதிபதி ஆனேன் என்று கூறியதோடு, இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், தொண்டை மன்னார், வல்வெட்டித்துறை உள்ளிட்டப் பகுதிகளில் ராணுவம் எந்தநேரமும் கையில் துப்பாக்கியுடன் வலம் வரும் என்று கூறியுள்ளார்.” என்று கண்டனம் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் பலரும் கைது செய்யப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.