/indian-express-tamil/media/media_files/2025/07/12/whatsapp-image-2025-2025-07-12-15-28-34.jpeg)
இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை. கூட்டணி ஆட்சியை நான் விரும்பவில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், இதனால் கூட்டணி ஆட்சி பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய் என்றும், தி.மு.க. கூட்டணியில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் வைகோ குறிப்பிட்டார். "தமிழகத்திற்கு இந்துத்துவா சக்திகளால் பெரும் ஆபத்து வந்துகொண்டிருக்கின்றது. அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பதற்கு நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம். கொள்கை அடிப்படையில் தான் தி.மு.க. கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகின்றோம்," என்று தனது கூட்டணி நிலைப்பாட்டிற்கான காரணத்தை அவர் விளக்கினார்.
கடந்த காலங்களில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்திருந்தது குறித்துப் பேசிய வைகோ, "பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றபோது அந்தப் பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கையில் இருந்து ராஜபக்சேவை அழைத்திருந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழர்களைக் கொன்றுகுவித்த ராஜபக்சேவை அழைக்கக்கூடாது என பிரதமர் மோடியிடம் நான் வலியுறுத்தினேன். ஆனால், அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்சேவை அழைத்தார். இதனால் உடனடியாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டோம்," என்று தனது கடந்தகால முடிவை நியாயப்படுத்தினார். தமிழக நலனுக்கு எதிராகச் செயல்பட்டபோது அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது போல, தற்போதும் தமிழக நலனுக்காகவே தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணிக்கு பெரிய வாக்கு வங்கி இருப்பதாகவும், ம.தி.மு.க.வும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிலும் இந்தக் கருத்துக்களைப் பிரகடனப்படுத்துவேன் என்று வைகோ கூறினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது அரசியல் பிழை என்றுதான் கூறினேனே தவிர, அ.தி.மு.க. குறித்தோ, முன்னாள் முதல்வர்கள் மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்தோ எந்தவொரு இழிவான விமர்சனங்களையும் தான் முன்வைக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் தன் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட வைகோ, அதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், "வாழ்க வசவாளர்கள்" என்றும் கூறினார்.
இந்திய அரசியலிலிருந்து அமித்ஷா ஓரங்கட்டப்பட வேண்டியவர் என்றும் வைகோ வலியுறுத்தினார். "அவர் இந்துத்துவா சக்திகளின் முதுகெலும்பாக இருந்து, இந்துத்துவா சக்திகளைத் தூண்டிவிட்டு வருகின்றார்," என்று அமித்ஷாவை விமர்சித்தார். தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்றும், அதை அமித்ஷா நிச்சயம் பார்ப்பார் என்றும் வைகோ சவால் விடுத்தார். மல்லை சத்யா கடந்த 4 ஆண்டுகளாகக் கட்சிக்கும், தனக்கும் விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை என்றும், அவர் குறித்து எந்தக் கருத்தையும் தான் கூற விரும்பவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை.வைகோ, துணைப் பொதுச்செயலாளர் ரொக்கையா மாலிக், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி. சேரன் உள்ளிட்ட ம.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.