மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 56 ஆண்டு கால அரசியல் பயணம் குறித்து ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த ஆவணப்படத்தில், வைகோ, அண்ணா, கருணாநிதி, பிரபாகரன், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுடனான அரசியல் பயணம் இடம்பெற்றுள்ளது. ஆனால், மறைந்த முன்னாள் ஜெயலலிதாவுடனான் அரசியல் பயணம் பகுதி மட்டும் இடம்பெறவில்லை.
தமிழக அரசியலில் கோபால்சாமி வையாபுரி என்கிற வைகோ முக்கியமானத் தலைவராக தொடர்ந்து அரசியலில் செயல்பட்டு வருகிறார். வைகோவின் அரசியல் பயணம் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. இருப்பினும், தமிழகத்தின் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்காக வைகோ குரல் கொடுத்திருப்பார்.
கலிங்கப்பட்டி முதல் டெல்லி நாடாளுமன்றம் வரை வைகோவின் 56 ஆண்டு அரசியல் பயணம் மிகவும் நெடியது. திமுகவில் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க. அன்பழகனுக்கு பிறகு, ஈர்ப்பு மிக்க தலைவராக உருவெடுத்த வைகோ, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தனது அனல் பறக்கும் பேச்சாற்றாலால் ஏராளமான இளைஞர்களைக் கவர்ந்தார்.
தீவிரமான ஈழ ஆதரவாளராக இருந்த வைகோ, திமுகவில் இருந்து விலகிய 1994 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைத் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வைகோ தற்போது, 4வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
வைகோ மதிமுக தொடங்கிய பிறகு, தேர்தல் அரசியலில் பல வெற்றி தோல்விகளைச் சந்தித்துள்ளார். அரசியல் கூட்டணிகளையும் மாறி மாறி வைத்துள்ளார். அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என பல கூட்டணிகளைக் கண்டுள்ளார். அதே போல, தனது அரசியல் பயணத்தில், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா பிரபாகரன், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைக் கண்டவர்.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்த வைகோ, திமுக எம்.எல்.ஏ.க்களால் மீண்டும் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவருடைய மகன் துரை வைகோ மதிமுக தலைமை நிலையச் செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 56 ஆண்டு கால அரசியல் பயணம் குறித்து ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தை வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தயாரித்துள்ளார். வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அவர் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகள் அனைத்தும் இந்த படத்தில் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
‘மாமனிதன் வைகோ’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தை வெளியிட்டுப் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பது சினிமா தியேட்டரில். இங்கு படங்களில் பல ஹீரோக்களை பார்த்து இருக்கிறோம். உண்மையான ஹீரோவை இன்றைக்கு நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம். ரியல் ஹீரோ என்றால் வைகோ தான். திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவர்கள். வைகோ சித்தரிக்கப்படாத ஹீரோவாக விளங்கி கொண்டிருக்கிறார். வைகோ மிசாவில் கைதாகி பாளை சிறையில் இருந்தபோது, எனக்கு கடிதம் எழுதவார். பாளை சிறையில் இருந்து சென்னை சிறைக்கு. எனக்கு மட்டுமல்ல சிறையில் உள்ள எல்லாருக்கும் கடிதம் எழுதியவர் வைகோ. எல்லாரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, சிறைவாழ்க்கை என்ன என்பதை எடுத்து சொல்கிற வகையில் அந்த கடிதத்தை படித்து மகிழ்ச்சியடைந்தது உண்டு, உணர்ச்சியடைந்தது உண்டு.
அவர் பொடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் அடைபட்டு இருந்தபோது, நாடாளுமன்ற தேர்தல். மதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறோம். அப்போது தலைவர் கலைஞர் என்னையும், அண்ணன் துரைமுருகனையும் அழைத்து இந்த கூட்டணி தொடர்பாக வேலூர் சிறையில் இருக்கக்கூடிய வைகோவை போய் பார்த்து விட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு வா என்று பணித்தார். சிறையில் போய் பார்த்தோம். சிங்கத்தை குகையில் போய் சந்தித்தால் எப்படி இருக்குமோ அப்படி போய் சந்தித்தோம். ஒரு குகையில் சிங்கம் போல் வைகோ இருக்கிறார். அந்த ஒப்பந்தத்தை கொடுத்தோம். படித்து கூட பார்க்கவில்லை. கலைஞர் சொல்லி விட்டார் என்பதற்காக கையெழுத்து போட்டார். அது இப்போது நினைவுக்கு வருகிறது.
56 வருடம் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்று விரும்பினாரோ, இல்லையோ என்று எனக்குத் தெரியாது. இடங்கள் எல்லாம் ஒதுக்கீடு செய்யும் நேரத்தில் உரிமையோடு சொன்னேன். ‘அண்ணே உங்கள் உடல்நலம் எனக்கு முக்கியம். எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு முக்கியம். ஒரு இடத்தில் போய் வேட்பாளராக நின்று விட்டால், தமிழ்நாடு முழுவதும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்ய முடியாது. ஆனாலும், மாநிலங்களவையில் தொடர்ந்து உங்கள் குரல் ஒலிக்க வேண்டும். தேர்தல் முடிவு எப்படி என்று நமக்கு தெரியாது.
மாநிலங்களவை உறுப்பினர் என்பது முடிவான ஒன்று. அதனால், வெற்றி பெற போகிறோமோ, இல்லையோ நீங்கள் மாநிலங்களவை உறுப்பினராக ஆகப் போகிறீர்கள். அதனால், நிச்சயமாக, உறுதியாக என்னுடைய கருத்தை ஏற்று கொண்டு, எப்படி கலைஞர் 3 முறை இடம் கொடுத்து ராஜ்ய சபாவில் உங்களின் குரலை ஒலிக்க வைத்தோரோ அதே மாதிரி நானும் ஆசைப்படுகிறேன் என்று சொல்லி அவரிடம் கேட்டேன். என்னுடைய ஆசையை ஏற்றுக்கொண்ட அவருக்கு, அப்போது நன்றி சொன்னேனோ இல்லையோ இப்போது உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய நன்றியை சொல்கிறேன். வைகோ தொடர்ந்து தன்னுடைய உடல்நலத்தையும் பாதுகாத்து கொண்டு, இந்த சமுதாயத்துக்கான தொடர்ந்து பாடுபட வேண்டும். பணியாற்ற வேண்டும். வாழ வேண்டும்.” என்று பேசினார்.
தமிழக அரசியலில் தனது பேச்சாற்றலால் மிக முக்கியமானத் தலைவராக வலம் வரும் வைகோவைப் பற்றிய ‘மாமனிதன் வைகொ’ என்ற ஆவணப்படத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் பகுதி மட்டும் இடம் பெறவில்லை என்று கருத்துகள் எழுந்துள்ளன. இந்த ஆவணப்படத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா பிரபாகரன், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுடனான அரசியல் பயணம் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் மட்டும் இடம்பெறாதது ஏன் என்ற கேள்விகள் உள்ளன. தற்போது மதிமுக திமுக கூட்டணியில் உள்ளதாலா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.