மல்லை சத்யா ம.தி.மு.க-வில் வைகோ மற்றும் அவருடைய மகன் துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், வைகோ முதல்முறையாக பதில் கூறியுள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்க்ளிடம் பேசியதாவது: “ம.தி.மு.க-வை பாதுகாத்து வருகின்ற முன்னோடிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், சிற்றூர், பேரூர், நகரக் கழக நிர்வாகிகள் இந்த கட்சியின் காவல் தெய்வங்கள். என்னால் அல்ல, அவர்களால் இந்த இயக்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னிடம் இருந்து ஒரு சில காலகட்டங்களில் விலகிச் சென்றவர்கள், என்னைப் பற்றி எங்கும் குறைத்தோ, குற்றம் சாட்டியோ பேசியது கிடையாது. நானும் எந்த மேடையிலும் அவர்களைப் பற்றி குறை சொன்னது கிடையாது. என்னோடு இந்த சோதனை நிறைந்த பயணத்தில் அவர்கள் பயணித்து வந்த இந்த காலம் வரையிலே அவர்களுக்கு நன்றி. எங்கிருந்தாலும் அவர்கள் நலமோடு வாழ்க. இதைத் தவிர வேறு எந்த வார்த்தைகளையும் மேடையிலோ அல்லது சங்கொலி ஏட்டிலோ பேசியதும் இல்லை எழுதியதும் இல்லை.
ம.தி.மு.க-வின் நிர்வாக குழு கூடுவதற்கு முன்பு, அந்த நிர்வாக குழுவில் அத்தனை மாவட்ட செயலாளர்களும் ஆடுதுறை முருகன் உள்ளிட்ட துணை பொது செயலாளர், துரை வைகோ ம.தி.மு.க-வுக்கு வர வேண்டும் என்று சொன்னபோது, நான் வருவதற்கு சம்மதிக்க மாட்டேன். இந்த கட்சிக்குள் அவர் வருவதை நான் விரும்பவில்லை என்று சொன்னபோது, நீங்கள் ஏன் இப்படி எதேச்சதிகாரத்தனமாக முடிவு சொல்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம் என்றார்கள்.
அப்படியானால், அதிலே ஒருவர் சொன்னார் ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள். அந்த முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னபோது சரி ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். அங்கே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது 106 பேர் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஓட்டு போட்டார்கள், அதில் 104 பேர் ம.தி.மு.க-வுக்கு துரை வைகோ வரவேண்டும் என்று வாக்களித்தார்கள். அதில் இரண்டு இரண்டு ஓட்டுகள் தான் வேண்டாம் என்று பதிவாகின. அதை ஏற்றுக் கொண்ட நான், அதன் விளைவாகவே அவர் (துரை வைகோ) இந்த இயக்கத்துக்குள்ளே வந்தார். எங்கள் இயக்கத் தோழர்களால் துக்க வீடுகளுக்கு செல்வதும், திருமண விழாக்களுக்கு செல்வதும், கொடியேற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதும், ஊர் ஊராகச் சென்று ஒரு இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் சுற்றி வந்து அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்து துன்பப்படுகிறவர்களுக்கு தன்னாலான உதவியைச் செய்து அதற்குப் பிறகு திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலே வெற்றி பெற்று அவர் மக்களவைக்குச் சென்ற பின்னர், சிறப்பாக பணியாற்றுகிறார். இன்று வடமாநிலத் தலைவர்கள், பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் என்னிடம் பாராட்டியபொழுது நான் உள்ளுக்குள் மகிழ்ந்தேன். அவர்கள் அவரை நடத்திய விதமும் அவர் நடந்து கொண்ட விதமும் எல்லோரையும் கவர்ந்தது.
ம.தி.மு.க கூட்டணி மாறும் என்று அந்த நபர் (மல்லை சத்யா) சொல்ல, ஜனநாயகத்தையே ஒளிவிளக்காக தூக்கிப் பிடிக்கின்ற தொலைக்காட்சிகள் அதை 10 நிமிடத்திற்கு ஒருமுறை வெளியிட்டனர். அது மட்டும் அல்ல, அந்த நபருக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற பட்டத்தையும் சூட்டி, அதே தொலைக்காட்சியில் அவர் சொல்கிறார், ம.தி.மு.க கூட்டணியில் இருந்து மாறும், அது விரைவில் நடக்கும் என்று பேசுகிறார்.
அடுத்து துரை வைகோவை பற்றி தரம் குறைந்து அவன், இவன் என்று பேசுவதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. கோபப்படவும் இல்லை, வயதிலேயே அவரைவிட (மல்லை சத்யா) அவர் சிறியவன் தானே, அப்படி சொல்வதனால் நாங்கள் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை.” என்று கூறினார்.