உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வைகோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சி சார்பில் விரைவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்தவாரம் மதுரை சென்றிருந்த நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருநாள் கழித்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், சென்னை திரும்பினார். மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருக்கவேண்டும் என்றும், பிறகு 2 வாரகாலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் : வைகோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில நாட்கள் ஓய்விற்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
அவர் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சிகளின் பட்டியல்
செப்டம்பர் 4 புதன்கிழமை மாலை 4 மணி - கலிங்கபட்டியில் கிராம மக்கள் சார்பாக வரவேற்பு.
05.09.2019 வியாழன் மாலை 4 மணி - சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் நீடிக்க வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்.
07.09.2019 சனி மாலை 6.00 மணி - நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், காவல் கோட்டம், வேள்பாரி நூல்களின் படைப்பாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு, ‘இயற்றமிழ் வித்தகர்’ விருது வழங்கும் விழா. சென்னை எழும்பூர் சிராஜ் மகால் அரங்கம்.
செப்டம்பர் 8 முதல் 15 வரை சென்னை - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுப் பணிகள்.