சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவை சந்தித்து ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்தவாரம் மதுரை சென்றிருந்த நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருநாள் கழித்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், சென்னை திரும்பினார். மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருக்கவேண்டும் என்றும், பிறகு 2 வாரகாலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு : வைகோ ஓய்வில் இருக்க வேண்டி உள்ளதால், அவர் தலைமையில் தேனியில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் சந்திப்பு : இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். டாக்டர்களின் அறிவுரையின்படி, ஓய்வில் இருக்குமாறு, வைகோவிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
கலந்துரையாடல் கூட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் : செப்டம்பர் 15 அன்று சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு குறித்து வருகிற 23, 24 ஆகிய நாட்களில் சென்னை, தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் அணி, மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.