Advertisment

மலைக் கோட்டையை குறி வைத்த ம.தி.மு.க: வேட்பாளரையும் முடிவு செய்தாச்சு!

நாடாளுமன்றத் தேர்தல்: திருச்சி தொகுதியை குறிவைக்கும் ம.தி.மு.க; வேட்பாளராக முக்கிய தலைவரை களமிறக்க திட்டம்

author-image
WebDesk
New Update
trichy mdmk

திருச்சி மலைக்கோட்டை, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை வேகமெடுத்திருக்கின்றது.

Advertisment

கடந்த 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்து பெரும்பான்மை வெற்றியை ஈட்டியது தி.மு.க கூட்டணி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்க்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.கவுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே உள்ளிட்டவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 38 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில் தற்போதைய நிலவரப்படி ஐ.ஜே.கே தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க திட்டம் வகுத்திருக்கின்றன. அதற்கு வசதியாக டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா உள்ளிட்ட தி.மு.க.,வின் மூத்த நிர்வாகிகள் தலைமையில் தொகுதி உடன்பாடு குழுவை அமைத்து காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க என தனது தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது தி.மு.க.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் தொகுதிப்பக்கம் அவ்வப்போது எட்டிப்பார்த்து தமது கட்சியினரையே சரியாக தக்கவைத்துக் கொள்ளாதவராக இருப்பதால் இந்த முறை திருச்சியை கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சியினருக்கு ஒதுக்க தி.மு.க முடிவெடுத்திருக்கின்றது.

இத்தகைய சூழலில் தி.மு.க.,வில் அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணி கட்சியான ம.தி.மு.க திருச்சி தொகுதியை தங்களுக்கு ஒதுக்கிடுமாறும், திருச்சியில் துரைவைகோவை நிறுத்திடவும் முடிவு செய்திருப்பதாக தி.மு.க.,விடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. தி.மு.க.,வும் திருச்சி தொகுதியை ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றன. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம், தலித் எழில்மலை, ரங்கராஜன் குமாரமங்கலம், அடைக்கலராஜ், செல்வராஜ், என பல ஜாம்பவான்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தொகுதி திருச்சி. தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். மீண்டும் அவரே திருச்சியில் போட்டியிட விரும்புகிறார். இதனால் தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை கேட்டு வாங்க காங்கிரஸ் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் சளைக்காமல் ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் திருச்சி தொகுதி மீது ஒரு கண் வைத்திருக்கின்றன. ராமநாதபுரம் தொகுதி கிடைக்காத பட்சத்தில் திருச்சியை எப்படியாவது கேட்டு வாங்கிவிட வேண்டும் என துடிக்கிறது முஸ்லீம் லீக். வரும் பிப்ரவரி 4-ம் தேதி ம.தி.மு.க உடன் தி.மு.க தொகுதி பங்கீடு குறித்தான ஆலோசனை நடத்தவிருக்கும் நிலையில் திருச்சியை உச்சபட்சமாக குறிவைத்திருக்கின்றது ம.தி.மு.க.

இதையடுத்து திருச்சி தொகுதியை ம.தி.மு.க குறிவைக்க காரணம் என்ன என்பது குறித்து அரசியல் ஆர்வலர்களிடம் விசாரித்தபோது; "கடந்த 2019 தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது டெல்லி சிபாரிசு செய்ததால்தான் தி.மு.க.,வும் சம்மதித்தது. பிறகு கே.என்.நேரு தலையீட்டால் தான் வெற்றி பெற்றார். வாக்கு சேகரிப்பின்போதே சரியான நேரத்துக்கு திருநாவுக்கரசர் வரவில்லை. இதனால் தி.மு.க-வினர் பல தருணங்களில் கடுப்பின் உச்சத்துக்கே சென்றனர். இருப்பினும் தலைமையின் உத்தரவினால் பெரிதுப்படுத்தாமல் அமைதியாக இருந்தனர். ஆனால், வெற்றிக்கு பிறகும் திருநாவுக்கரசரின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. குறிப்பாக தொகுதி மக்களின் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்பதில்லை. தேர்தலுக்கு பிறகு தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை.

இந்தநிலையில்தான் திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் பலரை திடீரென பொறுப்பில் இருந்து நீக்கி தமக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்களை தலைமைக்கு தெரிவித்து பொறுப்புகளை வாங்கி கொடுத்திருக்கின்றார். இதனால் திருச்சி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்க கூடாது என போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற உட்கட்சி பிரச்சனைகளால் மீண்டும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்க தி.மு.க தயங்குகிறது. இதையெல்லாம் தெரிந்துகொண்ட திருநாவுக்கரசரும் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். எனவே இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள தி.மு.க கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க திருச்சி தொகுதியை தங்களுக்கு கேட்கிறது" என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

இதுகுறித்து ம.தி.மு.கவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கத்திடம் பேசியபோது; "கடந்த தேர்தலிலேயே திருச்சி தொகுதி எங்களுக்கு வேண்டும் என கேட்டோம். தலைவர் வைகோவை நிறுத்துவதற்கான வேலைகளை செய்தோம். கல்லூரிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் அவர் பேசினார். கடைசியில் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில்தான் வரும் தேர்தலில் திருச்சி தொகுதியை ம.தி.மு.கவுக்கு ஒதுக்க வேண்டும் என தி.மு.க தலைமையிடம் கேட்டு இருக்கிறோம். இங்கு எங்களுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. திருச்சியில் கடந்த 2004-ல் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு எல்.கணேசன் வெற்றி பெற்றிருக்கிறார்.

என்னைப்பொறுத்தவரை, சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது திருச்சி. தமிழகத்தின் மையப்பகுதியாகவும் திருச்சி இருக்கின்றது. ஆகவே எங்களுக்கு திருச்சியை தி.மு.க தலைவர் ஒதுக்கினால் நாங்கள் சின்னவர் துரை வைகோவை பரிந்துரைப்போம். சின்னவர் துரை வைகோ மனப்பான்மையைப் பொறுத்தவரை தேர்தலில் நிற்ப்பது மட்டமல்லாமல், நின்று வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் மனப்பான்மையுடையவர். அவருக்கு ஏற்ற தொகுதியாகவும் திருச்சி இருக்கும்.

ஆனாலும், சின்னவர் துரை வைகோவை திருச்சியில் நிறுத்துவது குறித்து முடிவெடுக்கவேண்டியவர் தலைவர் வைகோ. ம.தி.மு.க.,வுக்கு திருச்சியை நாங்க கேட்டிருக்கோம். 90 சதவீதம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சின்னவர் துரை வைகோவை நிறுத்த நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். எனவே, அவர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். இதேபோல் தலைவர் வைகோ தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சி பணிகளையும் துரிதப்படுத்தியிருக்கின்றோம்.

மேலும், தமிழகத்தில் இந்தியா கூட்டணிதான் பலமாக இருக்கிறது. அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதியைக் கொடுத்தால் நாங்கள் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம். எனவேதான் எங்களுக்கு திருச்சி தொகுதியை கேட்கின்றோம் என்றார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment