கட்சி நலனுக்கு எதிரான செயல்பாடுகளிலும், கட்சியிலிருந்து வெளியேறியவர்களுடன் இணைந்து குழப்பம் விளைவிக்கும் முயற்சிகளிலும் மல்லை சத்யா ஈடுபட்டு வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்; ‘மல்லை சத்யா ஒரு காலத்தில் எனக்கு உடன்பிறவாத தம்பியாக இருந்தார். நான் அவரை மிகவும் நம்பினேன். மாமல்லபுரம் நிகழ்ச்சிகள், என் உயிரைக் காப்பாற்றிய தருணங்கள் எனப் பல முக்கியமான தருணங்களில் அவர் என்னுடன் இருந்தார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகள் தலைகீழாக மாறிவிட்டன.
கட்சியை விட்டு வெளியேறிய சிலருடன் மல்லை சத்யா நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். அவர்களை அழைத்துக்கொண்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரின் வீட்டிற்குச் செல்வது போன்ற செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார். மேலும், கட்சிக்கு எதிராகப் பதிவுகளை வெளியிடும் நபர்களுக்கு, மல்லை சத்யாவே வாசகங்களைத் தேடித் தருவதாகவும், அவர்கள் இவரின் பதிவுகளை அப்படியே வெளியிடுவதாகவும் வைகோ குற்றம் சாட்டினார். இத்தகைய செயல்கள் கட்சிக்குள் யாரும் ஏற்படுத்தாத குழப்பத்தை உருவாக்கும் என்றும், இதனை மூடிமறைக்கக் கூடாது என்பதாலேயே நிர்வாகக் குழுவில் தான் வெளிப்படையாகப் பேசியதாகவும் வைகோ தெரிவித்தார்.
முன்னர் துரை வைகோவும், மல்லை சத்யாவும் சமாதானம் செய்யப்பட்ட சூழலில், தற்போது மீண்டும் இதே பிரச்சனை எழுந்துள்ளது குறித்துக் கேட்டபோது, "கட்சியில் ஒரு நெருக்கடியும் இல்லை. பெரிய பெரிய தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் கட்சியை விட்டுப் போன போதும், ஒரு துரும்பு கூட அசையவில்லை. எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் போன்றோர் சென்ற போதும், ஒரு சிறு மாற்றத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு என்னோடு இருக்கிறார்கள். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், நான் எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஏற்றுக்கொண்டு கழகப் பணியாற்றுகிறார்கள்," என்று வைகோ உறுதியாகக் கூறினார்.
என்னை விமர்சனம் செய்து பதிவு போடுபவர்களுடன் தான் மல்லை சத்யா நாள்தோறும் அலைபேசியில் தொடர்பு கொள்கிறார். இது வெளிப்படையாகத் தெரிந்த பிறகும் நான் இதைச் சகித்துக்கொண்டிருக்க முடியாது. கட்சியைப் பாதுகாக்க வேண்டும். நிர்வாகக் குழுவில், மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிக்கு விரோதமாகவே இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்தினேன். அனைவரும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கூறினார்கள். நான் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் என்ன செய்கிறார் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தேன்," என்று வைகோ தெரிவித்தார்.