சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸும், முஸ்லீம் லீக்கும் எங்கள் கூட்டணிக் கட்சிகள். மற்றக் கட்சிகள் நட்புடன் இருப்பவை. தேர்தலின்போது சில கட்சிகள் வரலாம். சில கட்சிகள் போகலாம். வைகோ கூட்டணியில் இருப்பாரா என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்” என்றார்.
இதன்பிறகு பேட்டியளித்த வைகோ, “நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை திமுக தலைவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார். ஆனால், இதுவரை ஸ்டாலின் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், திமுகவுடன் தோழமையாக இருக்கும் மற்றொரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நேற்று அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்துப் பேசினார்.
பின்னனர் செய்தியாளர்களிடம் பேசிய திருமா, “திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நட்பு வலிமையாக உள்ளது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். திமுகவில் இருந்து சில கட்சிகளை உருவி விடலாம் என சிலர் மனப்பால் குடிக்கிறார்கள். அது நடக்காது.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும். இப்போது அதுகுறித்து எதுவும் பேச முடியாது" என்றார்.
இந்தச் சூழ்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துரைமுருகனும், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், "மூன்று கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்த 3 பேரை விடுவித்துள்ளனர். சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்திருக்க வேண்டும்.
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே, கூட்டணிக்கான விளக்கமும் கூட.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன். 20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் திமுக அணிதான் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "திமுக அணியில் இருக்கும் கட்சிகள் குறித்து இவ்வளவு பரபரப்புடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி" என்று கூறினார்.