கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஒருமனதாக தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
இதைத் தொடர்ந்து, துரை வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்களை தற்காலிகமாக நீக்கி கடந்த ஏப்ரல் மாதம் வைகோ உத்தரவிட்டார். அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக் கழகம் தாயகத்தில், மே 11 அன்று காலை 11 மணிக்கு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடைபெறுகிறது. அதில், அவர்கள் மூவரும் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஏப்பல் 29 அன்று தெரிவிக்கப்பட்டிருந்து.
ஆனால், அவர்கள் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்காமல், 07.05.2022, 09.05.2022 தேதியிட்ட கடிதங்களை கழகப் பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளனர்.
அக்கடிதத்தில், 05.04.2022 மற்றும் 18.04.2022 அன்று, அவர்களுக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த புகார்களுக்கு உரிய விளக்கம் கூறாமல், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தங்களை விசாரிக்க, தார்மீக உரிமை இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான மேற்கண்ட மூவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்களையும், அவர்களது கடிதம் உட்பட அனைத்து ஆவணங்களையும் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆராய்ந்தது
ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்து பரிந்துரை பேரிலும், கழக சட்டதிட்ட விதி எண் 19, பிரிவு-12 மற்றும் விதி எண் 33, பிரிவு-5 இன் கீழும், புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
வைகோவின் அறிக்கை, மதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.