ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையிலான ஈகோ அரசியல் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது!
தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்னைகளில் சகல இயக்கங்களும் இணைந்து செயல்படும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு! கடந்த 2014-ம் ஆண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரான வேல்முருகனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இந்த கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.
ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இதில் இணைந்தன. ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராகவும், ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு எதிராகவும் வீரியமான போராட்டங்களை இந்தக் கூட்டமைப்பு முன்னெடுத்தது. இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நடந்த தடியடியைக் கண்டித்து ஜூலை 8-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
ஆனால் இதற்கு முன்பு தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு நடத்திய ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்துகொண்ட ம.தி.மு.க., இந்தப் போராட்டத்திற்கு தனது சார்பில் பிரதிநிதியாகக்கூட யாரையும் அனுப்பவில்லை. இதற்கு காரணம், வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெறாத சீமானை இந்தப் போராட்டத்திற்கு அழைத்ததுதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய பிரமுகர்கள் சிலர், “தீவிர ஈழப் போராளி யார்? என்பதிலேயே வைகோவுக்கும், சீமானுக்கும் சின்னதாக ஈகோ யுத்தம் இருந்தது. அதன்பிறகு கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ உள்ளிட்டோரை தமிழர் அல்லாதவர்களாக சித்தரித்து சீமான் முழங்கியதால் அந்த விரிசல் அதிகமானது. தவிர, ‘திராவிடத்தை ஒழிப்போம்; தமிழ் தேசியத்தை வளர்ப்போம்’ என்பதாக சீமான் எழுப்பும் கோஷமும் வைகோவுக்கு உடன்பாடில்லை.
இதனால் நாம் தமிழர் கட்சியுடன் எவ்வித அரசியல் உறவுக்கும் தயாராக இல்லாத மனநிலையில் வைகோ இருக்கிறார். இந்தச் சூழலில் கூட்டமைப்பில் இடம்பெறாத சீமானை வேறு யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வேல்முருகன் அழைத்ததில் வைகோவுக்கு வருத்தம். அதனானால்தான் அவரும் வரவில்லை; அவர் சார்பில் பிரதிநிதியையும் அனுப்பவில்லை!’ என்கிறார்கள் அவர்கள்.
இதே கதிராமங்கலம் பிரச்னைக்காக ஜூலை 10-ல் கும்பகோணத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தப் போராட்டத்திற்கும் சீமான் செல்கிறார். ஆனால் அது குறிப்பிட்ட ஒரு அமைப்பு சார்பிலான போராட்டம் இல்லை என்பதால் அதற்கு வைகோ ஆட்சேபணை கூறவில்லையாம்!
நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இதுவரை தனித்தே போராட்டங்களை நடத்தி வந்த சீமான், முதல்முறையாக கதிராமங்கலம் விவகாரத்தில்தான் கூட்டுப் போராட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிறார். மக்கள் நலப் போராட்டங்களில் அனைத்து கரங்களும் இணைவது ஆரோக்கியமானதுதானே!