நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம் குறித்து கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரை வைகோ சந்தித்து பேசினார்.
நியூட்ரினோ ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் அம்பரப்பர் மலைப்பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு எதிராக மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் போராடி வருகின்றன.
நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மதிமுக முன்னெடுக்கிறது. இது குறித்து மதிமுக சார்பில் வெளியான செய்திக் குறிப்பு : கேரள மாநில நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர், முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ 21.3.2018 அன்று மாலை 5 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
கேரளா முன்னாள் முதல்வர் திரு.அச்சுதானந்தன் அவர்களை தலைவர் வைகோ அவர்கள் சந்தித்து நியூட்ரினோ சம்பந்தமான மனுவை அளித்தார் pic.twitter.com/Xz5rmgFLqK
— Minnal Mohamed Ali (@minnalmdmk) 21 March 2018
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, அங்கே இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க உள்ளது. இந்த வகையில் உலகத்தில் அமைக்கப்படுகின்ற மிகப்பெரிய ஆய்வுக்கூடம் இதுவாகத்தான் இருக்கும்.
பாறைகளைக் உடைப்பதால் ஏற்படக்கூடிய அதிர்வுகளால், அருகில் உள்ள கேரளத்தின் இடுக்கி அணையும், தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்; அணுக்கழிவுகளைக் கொண்டு வந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவார்கள்; அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்து, செயற்கை நியூட்ரான்கள், இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும்.
இங்கிருந்து, உலகில் எந்த நாட்டில் உள்ள அணு ஆயுதங்களையும் வெடிக்கச் செய்யலாம்; செயல் இழக்கச் செய்யலாம். உலகில் அணு ஆயுதப் போர் எந்தப் பகுதியில் மூண்டாலும், தேனி மாவட்டம் அம்பரப்பர் ஆய்வகம்தான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகும். கேரள மாநிலம், தென் தமிழ்நாடு அழிந்து போகும்.
தலைவர் வைகோ அவர்கள் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து , நாசக்கார நீயூட்ரினோ எதிர்ப்பு குறித்து விவாதித்தார்@rameshchennitha pic.twitter.com/9tPNp54aFF
— Minnal Mohamed Ali (@minnalmdmk) 21 March 2018
இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ வழக்குத் தொடுத்து, 2015 மார்ச் மாதம் தடை ஆணை வாங்கினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றி விடத் துடிக்கின்றார். அமெரிக்காவின் அக்கறைதான் இதற்குக் காரணம். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைக் கொடுப்பதற்குப் பிரதமர் கட்டாயப்படுத்துகின்றார்.
எனவே, இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டுவதற்காக, மார்ச் 31 ஆம் தேதி காலையில், மதுரையில் இருந்து விவசாயிகள், இளைஞர்கள், தொண்டர்களோடு நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், வைகோ நடைபயணம் தொடங்குகிறார். வழிநெடுகிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து, ஏப்ரல் 9 ஆம் தேதி கம்பத்தில் நடைபயணம் நிறைவு பெறுகின்றது.
மார்ச் 31 ஆம் நாள் மதுரையில் நடைபயணத் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என அச்சுதானந்தனுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்தார். இப்பிரச்சினை குறித்த நீண்ட விளக்கக் கடிதத்தையும் வைகோ தந்தார். இந்த நிகழ்வில் அச்சுதானந்தன் கலந்து கொள்கின்ற வாய்ப்பு உள்ளது என்று வைகோ தெரிவித்தார்.
அதன்பின் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், உள்துறை முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலாவை மாலை ஆறு மணிக்கு அவரது வீட்டில் வைகோ சந்தித்தார். அவரிடமும் இதுபற்றி விளக்கிக் கூறினார்.
ரமேஷ் சென்னிதலா ஏப்ரல் 9 ஆம் தேதி கம்பம் நிறைவு நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதி அளித்தார். இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.