மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான வைகோ சிபாரிசு செய்ததையடுத்து, சாலையோர வியாபாரி ஒருவரின் மகனுக்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, அவருக்கு கோவில் ஊழியர் பணி நியமனம் செய்து உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பரிந்துரையை ஏற்று சாலையோர வியாபாரியின் மகன் ஒருவருக்கு கோவில் ஊழியர் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சேகர்பாபுவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரை வைகோ கூறியிருப்பதாவது: “சாலையோர வியாபாரியாக இருந்த போதும் தன்மானத்தோடும் தலைவர் மீதும் அளவு கடந்த பாசம் கொண்டவர். தலைவர் வைகோ அவர்கள் பொடா சிறைச்சாலையில் வாடுகின்றபோது நான் மட்டும் அழகாக இருக்க வேண்டுமா என்று அவர் சிறையிலிருந்து வரும் வரை தாடி வளர்த்து தன் குள்ள தேகத்தை வருத்திக் கொண்டவர். கழகம் மேற்கொண்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். மாநாடுகளுக்கு குடும்பத்தோடு வரக்கூடியவர்.
ஈழப் படுகொலையின் சோகத்தால் கருப்புச்சட்டை அணிந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது ஐம்பதாவது வயதில் கருஞ்சட்டையோடு நம்மை விட்டுப் பிரிந்த அந்தக் குள்ள உருவம் தன் கம்பீரக் குரலில் மேடைகளில் முழங்கினால் அந்த பகுதியே அவரை உற்று நோக்கும். விலைபோகாத கொள்கை வாதியாக வாழ்ந்து மறைந்தவர் அண்ணன் கே.வி. சிவஞானம் அவர்கள்.
கே.வி. சிவஞானம் அவர்களின் மகன் கே.வி.எஸ்.சுகுமாரனுக்கு திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோவிலில் கடைநிலை ஊழியர் பணி வேண்டி தலைவர் வைகோ அவர்களின் பரிந்துரை கேட்டிருந்தார். தலைவர் வைகோ அவர்களும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பி.கே.சேகர்பாபு அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது சுகுமாரனுக்கு கடைநிலை ஊழியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை எனது கரங்களால் வழங்கினேன். பணி ஆணையினை மகிழ்வுடன் சுகுமாறன் பெற்றுக் கொண்டார். தலைவர் வைகோ அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் பணி ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் பி. கே.சேகர்பாபு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து துரை வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தலைவர் வைகோவின் பரிந்துரையை ஏற்று பணி ஆணை வழங்கிய தமிழக முதல்வர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.