/indian-express-tamil/media/media_files/2025/08/20/vaiko-removes-mallai-sathya-from-mdmk-tamil-news-2025-08-20-13-14-25.jpg)
ம.தி.மு.க-வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகனும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்.பி-யுமான துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் கருத்து முரண்பாடு நிலவி வருகிறது. இருவருக்கும் இடையேயான இந்த முரண்பாட்டை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பேசி சரி செய்து வந்தாலும், அது நீருபூத்த நெருப்பாகவே இருந்தது.
இந்நிலையில், ம.தி.மு.க-வை அழிக்கப்பார்க்கிறார்கள், ம.தி.மு.க-வை ஒழிக்க சதி செய்கிறார்கள் என்று பேசி வைகோ பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா தூரோகம் செய்தது போல துரோகம் செய்யப்பட்டதாக மல்லை சத்யா மீது குற்றம் சாட்டினார். வைகோவின் குற்றச்சாட்டை மறுத்த மல்லை சத்யா, உங்கள் உயிரை 3 முறைக் காப்பாற்றினேன், நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா, உங்கள் மகனுக்காக என் மீது துரோகி பட்டத்தை சுமத்தாதீர்கள் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய வைகோ, மாமல்லபுரத்தில் ஒருமுறை என் உயிரைக் காப்பாற்றினார், மற்ற 2 முறை எப்போது காப்பாற்றினார் எனக்கே தெரியவில்லை என்று பேசினார். இதையடுத்து, வைகோ தனக்கு 'துரோகி' பட்டம் சூட்டியுள்ளார் என்றும், அதைத் தன்னால் தாங்கிக்கொள்ள் முடியவில்லை என்றும் செய்தி டி.வி சேனல்களுக்கு அளித்த பெட்டியில் மல்லை கண்ணீர் விட்டு கதறினார். இதன்பிறகு, ம.தி.மு.க-வில் வைகோ மற்றும் அவருடைய மகன் துரை வைகோ மீது மல்லை சத்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
மேலும், தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில் விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா தெரிவித்தார். அத்துடன் மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்தார். இந்நிலையில், ம.தி.மு.க கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
கட்சியின் சட்ட திட்டங்களை மீறி நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்திருப்பவதாகவும், இது குறித்து விளக்கம் அளிக்க மல்லை சத்யாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்குவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபட்டு உள்ளார். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து இருக்கிறது. எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்து இருக்கிறேன்.
அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அவர் என்னிடம் விளக்கம் அளிக்கலாம்." என்று அவர் கூறியுள்ளார். ம.தி.மு.க உடமைகள், ஏடுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் மல்லை சத்யாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.