திருச்சி முக்கொம்பு அருகில் இருக்கும் பெட்டவாய்தலையில் சேக் பாத்திமா திருமண மண்டபத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்துவைத்தார்.
அவருடன் துரை வைகோவும் வந்திருந்தார். நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் இதுவரை இல்லாத துர்பாக்கியம் மற்றும் சாபக்கேடு ஆளுநர் ரவி. ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமக்கு இல்லாத அதிகாரத்தை தானே எடுத்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை எதிர்த்து செயல்படுகிறார்.
இந்துத்துவ ஏஜெண்டாக அவர் செயல்பட்டால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தாந்தோன்றி போக்கு சரியல்ல. ஆளுநர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லா விதமான யோசனையும் செய்து தமிழகத்திற்கு எது நல்லதோ அதை செய்து வருகின்றார்.
அனைத்துத் துறைகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். எது நல்லதோ அதை அவர் செய்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு நாடு அளவில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது.
தமிழ்நாடு இந்த 2 ஆண்டுகளில் பெற்ற சிறப்பைவிட வருங்காலங்களில் இன்னும் அதிகமான சிறப்பை பெறும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திருச்சி மாநகர மாவட்டசெயலாளர் சோமு, தெற்கு மாவட்டசெயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் உள்ளிட்ட மதிமுக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“