திமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்

மதிமுக.வினர்-நாம் தமிழர் கட்சியினர் இடையே திருச்சியில் நடைபெற்ற மோதல் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, ‘நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக’ கூறினார்.

மதிமுக.வினர்-நாம் தமிழர் கட்சியினர் இடையே திருச்சியில் நடைபெற்ற மோதல் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, ‘நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக’ கூறினார்.

ம.தி.மு.க. – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் மோதல் மூண்டது. கட்சிக் கொடிக்கம்பங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இந்த மோதல் குறித்து அப்போதே சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘என்ன நடந்ததுன்னு விசாரிக்கிறேன்’ என முடித்துக்கொண்டார்.

இந்தச் சூழலில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘கொள்ளிடம் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரி செயல்பட்டுள்ளது. இதில், 3 அடிக்கு பதிலாக 30 அடி ஆழம் வரை மணல் எடுத்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது.

கொள்ளிட நீரை நம்பி கல்லணை முதல் கீழணை வரை 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர்.
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கும் பகுதியின் அருகாமையில் சுடுகாடு உள்ளது. அங்கு திடீர்குப்பத்தை சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இங்கிருந்து 8 மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 17 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மணல் எடுக்கப்பட்டால் இவைகள் பாதிக்கப்படும்.

இந்த பகுதி மக்கள் மணல் குவாரி அமைக்க கூடாது என்று அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மணல் குவாரி அமைப்பதை கைவிட வில்லை என்றால் இப்பகுதி மக்களை திரட்டி நாங்களும் சேர்ந்து பெரிய போராட்டம் நடத்துவோம்.’ இவ்வாறு வைகோ கூறினார்.

பின்னர் நிருபர்கள் திருச்சியில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும், ம.தி.மு.க. கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வைகோவிடம் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளித்தபோது, ‘தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளேன். ஆனால் ஒரு நாளும் எனக்கு எதிராக இவ்வகையான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். எனினும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும்’ என்றார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close