மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி, தனது தந்தை வைகோவிற்கு ஆதரவாக அரசியலுக்கு வருவதாக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியிருந்த நிலையில், அவர் மதிமுக பொருளாளராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், வைகோ மகன் துரை வையாபுரிக்கு மதிமுக பொருளாளர் பதவி வழங்கப்படுவதற்கு மதிமுகவில் கொங்கு மண்டலத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை” என்று கூறினார்.
அரசியலில் 56 ஆண்டுகள், தான் நிறையவே கஷ்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார். எண்ணற்ற போராட்டங்கள், ஜெயில் வாழ்க்கை என தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டு கஷ்டப்பட்டதாகவும், இந்தக் கஷ்டம் தன்னோடு போகட்டும் என்றும் வைகோ கூறினார்.
முன்னதாக, சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தனது அப்பா வைகோவிற்கு வயதாகி விட்டதால் அவருக்கு ஆதரவாக அரசியலுக்கு வருவதாக பேசியிருந்தார்.
கடந்த மாதம், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோவைன் மகன் துரை வையாபுரி, தனது பெயர் துரை வையாபுரி இல்லை என்றும் இனி துரை வைகோ என்றும் தெரிவித்தார். மேலும், தொண்டர்களைப் போலவே மக்கள் சொல்லும்போது பதவிக்கு வருவேன் என்று கூறினார்.
வைகோ மகன் துரை வையாபுரியின் பேச்சு அவர் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு மதிமுகவுக்கு உள்ளே மட்டுமல்ல மாநில அரசியலிலும் பேசு பொருளானது.
திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து இரண்டாம் கட்ட தலைவர்களில் செல்வாக்கு மிக்கவராக இருந்த வைகோ, திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து 1994-ல் மதிமுக-வைத் தொடங்கினார். அரசியலில் கால் நூற்றாண்டுக்கு மேலான மதிமுகவின் பயணத்தில் நிறைய வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது. அன்றைக்கு அவருடன் திமுகவில் இருந்து வெளியேறிய பல முக்கிய நிர்வாகிகள் மீண்டும் திமுகவுக்கு திரும்பினார்கள். பலரும் அவருடன் இன்றும் மதிமுகவிலேயே உள்ளனர்.
ஆனால், வைகோ தலைமையிலான மதிமுக தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், மதிமுகவின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால், அவர் மதிமுகவில் இருந்து கொண்டு திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாக வழக்கை சந்தித்து வருகிறார். ஆனால், சமீபத்தில், கணேசமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் பிரமாணப்பத்திரத்தில், தான் திமுக உறுப்பினர் என்று தெரிவித்திருந்தார். இதனால், மதிமுகவில் பொருளாளர் பதவி காலியாக இருப்பதாகவே தெரிகிறது. அதனால், வைகோ மகன் துரை வையாபுரி மதிமுக பொருளாளர் பதவி ஏற்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுவதாகத் தெரிகிறது.
இந்த சூழ்நிலையில்தான், மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்டோபர் 20ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வைகோ தனது மகன், அரசியலுக்கு வருவதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். ஆனாலும், துரை வையாபுரியின் ஆதரவாளர்கள் அவர் பொருளாளர் பதவி ஏற்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால், மதிமுகவுக்குள் இதற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால், மதிமுகவின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி கொங்க்கு மண்டலப் பகுதியைச் சேர்ந்தவர். அதனால், கொங்குமண்டலத்தைச் சேர்ந்த ஒருவரையே மதிமுக பொருளாளராக நியமிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் வைகோ தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆனால், இப்போது வைகோவின் மகன் வைகோ வையாபுரி வைகோவின் அரசியல் வாரிசாக மதிமுகவுக்குள் வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“