/indian-express-tamil/media/media_files/2025/09/15/vaiko-trichy-mdmk-2025-09-15-22-13-09.jpeg)
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார், சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் குறுக்கே சுவர் எழுப்பி தடுத்து கொண்டுள்ளது ஒன்றிய அரசு தான் என திருச்சி ம.தி.மு.க மாநாட்டில் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இறுதியில் பேருரையாற்றிய வைகோ பேசியதாவது;
மனிதர்கள் வருவார்கள், போவார்கள், சிலர் விலகி போவார்கள், ஆனால் என் பயணம் நிற்காது என்கிற ஆங்கில கவிதை போன்றது தான் ம.தி.மு.க.,வின் பொது வாழ்க்கை.
ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியது, முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தது, நியூட்ரினோ ஆலையை தடுத்தது, என்.எல்.சி தனியார்மயமாவதை தடுத்தது உள்ளிட்ட எண்ணற்றவற்றை ம.தி.மு.க செய்துள்ளது.
உங்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாட்டில் நடக்கும் ஜனநாயக படுகொலைகளை அடுக்கடுக்காக துரை வைகோ கூறினார். துரை வைகோ பேச்சை கேட்டு நான் திகைத்து விட்டேன். அவர் பேச்சுக்காக ஆற்றல் தந்தது நீங்கள் தான்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற சட்டம் கொண்டு வருவது ஹிட்லர், முசோலினியின் பாசிச போக்கு. இதை கட்சி வித்தியாசமின்றி அனைவரும் எதிர்க்க வேண்டும்.
இன்று இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்களில் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள். மொழி பிரச்சனையில் தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிக்காட்டுகிறது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்பதை தாரக மந்தீரமாக கொண்டு ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடத்தி அதில் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும், முஸ்லீம்களுக்கு ஓட்டுரிமை கிடையாது, சமஸ்கிருதம், இந்தியும் தான் ஆட்சி மொழி உள்ளிட்ட பிரகடனத்தை செய்துள்ளார்கள்.
இந்தியாவை இந்திய ஐக்கிய நாடுகள் என்று தான் அழைக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு மாநாட்டில் தீர்மானம் போட்டுள்ளோம். அண்ணா நாடாளுமன்றத்தில் பேசும் போது கூட திராவிட நிலப்பரப்பிலிருந்து வந்துள்ளேன் என்று தான் குறிப்பிட்டார். வரும் காலத்தில் கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்துங்கள். நம்முடைய கவனம் அனைத்தும் இலட்சியத்தில் தான் இருக்க வேண்டும்.
1967 தேர்தலுக்கு முன்பாக அண்ணா தி.மு.க.,வினருக்கு கொடுத்த அறிவுரை "உங்கள் கவனமனைத்தும் தேர்தலில் தான் இருக்க வேண்டும், தேர்தலில் நாம் வெல்ல வேண்டும் வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது,” என குறிப்பிட்டார். அதை தான் நானும் குறிப்பிடுகிறேன். தி.மு.க.,வினரோடு பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.
திராவிட மாடல் ஆட்சி நடத்த முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் குறுக்கே சுவர் எழுப்பி தடுத்து கொண்டுள்ள ஒன்றிய அரசு தான்.
வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ள முதல்வருக்கு வாழ்த்துகள். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என சிலர் விவாதிக்கிறார்கள். 2026 தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறுவோம். தி.மு.க தனி பெரும்பான்மை பெறும் என்பதை இந்த மாநாட்டில் பிரகடனம் செய்கிறேன்.
திராவிட இயக்கங்களின் கொள்கைகளை காக்க, அண்ணா, கலைஞரின் லட்சியங்களை வென்றெடுக்க நாம் போராடுவோம். என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை, இனியும் விமர்சிக்க மாட்டேன். வசவாளர்கள் வாழ்க...
திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என உள்துறை அமித்ஷா கூறுகிறார். அவர் கூறுவது பேரண்டத்தை இரண்டு விரலால் அளந்து விடுவேன் என கூறுவது போல் அறியாமையானது. கடலை குடித்து விடுவேன் என ஒருவர் கூறுவது போன்ற வார்த்தைகளை தான் அமித் ஷா கூறியுள்ளார். பலரின் தியாகத்தால் உருவாகி வேரூன்றி வளர்ந்துள்ள திராவிட இயக்கத்தை ஒரு போதும் நெருங்க முடியாது. அமித் ஷாவின் கனவு பகல் கனவாகும் அது ஒரு போதும் பலிக்காது.
இந்த மாநாட்டில் அனைவருக்கும் நன்றி கூறும்போது ஒலி பெருக்கி ஒருவரை பேசவும் வைக்கவும், பேச்சுக்கு தடங்கலையும் ஏற்படுத்தும் சிறப்பாக ஒலி பெருக்கி அமைத்து கொடுத்தவருக்கு நன்றி. இவ்வாறு வைகோ கூறினார்.
இந்த மாநாட்டில், 2026 தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் அதற்கு ம.தி.மு.க பாடுபடும், சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரத்தில் பா.ஜ.க.,வின் சதியை முறியடிக்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் ஏதாவது குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.