திமுக தலைவர் கருணாநிதி, ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த 24-ம் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "சிறிது காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இல்லை. அவரது உடல் நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம்" என்றார்.
இதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "கருணாநிதியின் உடல்நலத்தில் சிறிது நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கருணாநிதியின் வீட்டிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தா.பாண்டியன், இயக்குனர் பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இதன்பின் பேட்டியளித்த வைகோ, "ட்ரக்கியாஸ்டமி செய்தால் சில நேரங்களில் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். குணப்படுத்த மருத்துவர்கள் தக்க சிகிச்சையளித்து வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார். அதே காந்தக்குரலோடு கருணாநிதி மீண்டும் பேச இயற்கை அன்னை அருள் தருவார் என நம்புகிறேன்." என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன், "கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை, அவரிடம் இயற்கை போராடுகிறது" என்று உருக்கமாக தெரிவித்தார்.
இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், "திமுக தலைவர் கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ வேண்டும். 50 ஆண்டுகள் ஒரே இடத்தை தக்கவைத்துக் கொண்ட ஒரே தலைவர் கருணாநிதி" என்று தெரிவித்தார்.
கண்ணீர் மல்க பேட்டியளித்த டி.ராஜேந்தர், "திமுகவை 50 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் கட்டிக்காத்து வருகிறார் கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதியின் திறமை வேறு யாருக்கும் இல்லை. அவரிடம் பணியாற்றியதே கடவுள் எனக்கு அளித்த பாக்கியமாக நான் கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.